Home Featured நாடு பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து மகாதீர் நீக்கப்பட்டார்!

பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து மகாதீர் நீக்கப்பட்டார்!

957
0
SHARE
Ad

petronas-logo-கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வரும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை, பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து, மலேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நீக்கியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நஜிப்பின் அலுவலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், நடப்பு அரசாங்கத்தை மகாதீர் ஆதரிக்கவில்லை என்பதால், அரசாங்கம் தொடர்புடைய எந்தப் பதவியிலும் அவர் நீடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மகாதீர் கையெழுத்திட்டு, அறிமுகப்படுத்திய “பொதுமக்கள் பிரகடனம்” – ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்ட நடவடிக்கை என்பதோடு, நாட்டின் சட்டங்களுக்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்றும் பிரதமர் துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் விலகிய பின்னர், நாட்டின் அரசுடமையான, மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக மகாதீர் நியமிக்கப்பட்டார்.

புரோட்டோன் நிறுவனத்திலிருந்தும் நீக்கப்படுவாரா?

mahathirprotonபெட்ரோனாஸ் நிறுவன ஆலோசகர் பதவியிலிருந்து மகாதீர் நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புரோட்டோன் கார் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனது ஆட்சிக் காலத்தில் மலேசியாவுக்கென சொந்தக் கார் தயாரிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கில் புரோட்டோன் நிறுவனத்தைத் தொடக்கினார் மகாதீர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அந்த நிறுவனம் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் நிர்வாக வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றார் மகாதீர்.

புரோட்டோன் நிறுவனமும் அரசாங்க நிறுவனம் என்பதால், அடுத்த கட்டமாக, மகாதீர் அந்தப் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நஜிப்பின் இந்த எதிர் நடவடிக்கைகளிலிருந்து, அவருக்கும், மகாதீருக்கும் இடையிலான அரசியல் போராட்டம், நெருக்கடியான உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.