Home Featured நாடு சோதிநாதன் இணைப்பால், வலுப் பெறும் சுப்ராவின் தலைமைத்துவம்! தடுமாறும் பழனிவேல் அணி!

சோதிநாதன் இணைப்பால், வலுப் பெறும் சுப்ராவின் தலைமைத்துவம்! தடுமாறும் பழனிவேல் அணி!

1137
0
SHARE
Ad

subramaniam-sothinathan-combo

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை, (அக்டோபர் 16) தொடங்கும் மஇகாவின் தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும், பேராளர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும், ஒரு முக்கியமான அரசியல் அம்சம், விவாதப் பொருளாக உருவெடுக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அணியினரின் சார்பில் அவர்களுக்கு முன்னின்று தலைமை தாங்கிப் போராடி வந்த டத்தோ எஸ்.சோதிநாதன் மீண்டும் மஇகாவில் இணைவார் என்ற செய்திதான் அது!

இதன் மூலம், பழனிவேல் தரப்பினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில கூட்டங்களில் மட்டுமே முன்னாள் தலைவர் பழனிவேலு தலைகாட்டி வந்தார். மற்றபடி, பல்வேறு முனைகளிலும் இரண்டாவது நிலையிலும், சில தருணங்களிலும், தலைமை தாங்கியும் பழனிவேல் அணியினரின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் சோதிநாதனுக்குப் பெரும் பங்கு இருந்தது.

#TamilSchoolmychoice

G PALANIVEL / SEPETANG BERSAMA PRESIDEN MIC

பழனிவேல் அணியில் இடம் பெற்றிருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்,  சோதிநாதன் ஆதரவாளர்கள் அல்லது அவரது தலைமைத்துவத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு அவர் பின்னால் வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், பிரதமர் நஜிப்பின் ஆசியுடனும், ஆதரவுடனும் நடைபெற்ற சோதிநாதனுக்கும், டாக்டர் சுப்ராவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள், சுமுகமாக முடிவுற்று, கட்சிக்கு மீண்டும் திரும்புவதை சோதிநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்சியின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டுதான் இணைகிறேனே தவிர, மற்றபடி தனிப்பட்ட பதவி ஆசைகளினால் அல்ல என சோதிநாதன் அறிவித்திருந்தாலும், அவரது இணைப்புக்குப் பிறகு கட்சியில் அவருக்கு முக்கிய பணிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்த பட்சம், மஇகா மத்திய செயலவையில் அவர் நியமன உறுப்பினராக இடம் பெறக் கூடும்.

சுப்ராவின் தலைமைத்துவம் வலுப்பெறுமா?

PTJ07_231013_SUBRAMANIAMசோதிநாதனின் வருகை, மஇகாவில் ஒரு சில தரப்புகளுக்கு விருப்பமில்லை என்றாலும், கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், இந்திய சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், பழனிவேல் அணியில் செயல்பட்டு வருபவர்கள் மீண்டும் மஇகாவுக்குத் திரும்புவது என்பது காலத்தின் கட்டாயம் என்பதை நடப்பு அரசியலை உணர்ந்தவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

மிகக் கடுமையான சவாலாக  இருக்கப் போகும் 14-வது பொதுத் தேர்தல் ஒருபுறம் – மகாதீர்,மொகிதின், அன்வார் இப்ராகிம் இணைப்பால் விசுவரூபம் எடுக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணி – என்ற சூழலில், பிளவுபட்டு நிற்பது மஇகாவுக்கு பலவீனமே தவிர, பலம் அல்ல!

எனவேதான், கடந்த கால கசப்புகளை மறந்து, மீண்டும் சோதிநாதனை டாக்டர் சுப்ரா ஏற்றுக் கொள்ள, அதற்கு பிரதமரும் ஆதரவு தெரிவிக்க, கட்சியிலும் பெரும்பான்மையான முக்கியத் தலைவர்கள் இணக்கம் தெரிவிக்க, விறுவிறுவென மஇகாவின் அரசியல்  காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, கட்சியின் தேசியத் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ தேவமணி சுப்ராவுக்கு தனது ஆதரவைப் புலப்படுத்தியிருக்கின்றார்.

மஇகா மாநாட்டிற்கு சோதிநாதன் வருவாரா?

sothinathanஇதற்கிடையில், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மஇகா தேசியப் பொதுப் பேரவையில், சோதிநாதனும்  தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநாட்டைத் திறந்து  வைக்க பிரதமர் வருகை தரவிருப்பதாலும், – மீண்டும் தான், மஇகாவில் இணைவதற்கு பச்சைக் கொடி காட்டி, வழிகளைத் திறந்து விட்டவர் பிரதமர்தான் – என்பதாலும், சோதிநாதன் மாநாட்டுக்கு வருகை தருவார் என அவருக்கு  நெருக்கமான  ஒரு வட்டாரம் தெரிவித்தது.

“அப்படியே, அவர் மாநாட்டுக்கு வராவிட்டாலும், பரவாயில்லை. காரணம், சரியான நேரத்தில் அவர் மீண்டும் கட்சியில் சேரும் தனது முடிவை – அதுவும் மாநாட்டுக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது அறிவித்திருக்கின்றார். இதன்மூலம், கட்சியில் இதுவரை நிலவி வந்த ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து, தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, சுப்ராவுக்கு ஆதரவான அறிக்கையை சோதிநாதன்  விடுத்திருப்பதால், நாளைய மாநாட்டில் அவர் இல்லாவிட்டாலும், அவரது தாக்கம், நிச்சயம் இருக்கும். அவரது வருகையால் சுப்ராவின் தலைமைத்துவமும், கட்சியும் மேலும் வலுப்பெறுகின்றது என்ற தோற்றம் நிச்சயம் பேராளர்களிடத்தில் வெளிப்படும்” என மஇகா தலைமைத்துவத்துக்கு நெருக்கமான வட்டாரம்  ஒன்று தெரிவித்துள்ளது.

பழனிவேல் அணியின் நிலை இனி என்ன?

Palanivel -Sothinathan-Balakrishanஇதற்கிடையில், இன்று சனிக்கிழமை சோதிநாதனும் அவரது ஆதரவாளர்களும் இல்லாமல், தேசிய நிலையிலான கூட்டம் ஒன்றை பழனிவேல் அணியினர் தலைநகரில் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஜோகூர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமை தாங்கியிருக்கின்றார்.

பழனிவேல் அணியினரைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் எதிர்பார்க்கும் அடுத்த கட்ட அரசியல் சம்பவம், சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிராக அவர்கள் தொடுத்திருக்கும் வழக்கின் மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு.

தீர்ப்பு சாதகமாக அமைந்தால், அந்த அணியில் உற்சாகம் கரைபுரளும். ஆனாலும், அந்தத் தீர்ப்பு  என்பது, மீண்டும் அந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து நடத்துவது போன்ற நிலைமையை உருவாக்குமே தவிர, மஇகா தலைமைத்துவத்தையோ, கட்சியையோ அவர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்காது.

இதன்காரணமாக, சோதிநாதனைத் தவிர்த்து எஞ்சியுள்ள சில பழனிவேல் அணித் தலைவர்கள் மீண்டும் மஇகாவுக்குத் திரும்புவதற்காக, தாங்களே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடக்கியிருப்பதாக, சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழனிவேல் அணியினர் தற்போது வலுவான, நம்பிக்கையான, ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் தடுமாறுவது தெளிவாகத் தெரிகின்றது. அத்தகையதொரு தலைமைத்துவத்தை அந்த அணிக்கு இதுவரை வழங்கி வந்த சோதிநாதன் இல்லாத சூழ்நிலையில்,

இனி அவர்களின் அடுத்த கட்டப் போராட்டம் எந்த அளவுக்கு வலிமையானதாக  இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்!

-இரா.முத்தரசன்