கிள்ளான் – இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மாநில கடற்பகுதிகளை ஒட்டிய வசிப்பிடங்களில் இருந்து சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சபா பெர்னாமில் இரு பாதுகாப்பு மையங்களும், காப்பாரில் ஒரு பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் மொகமட் சானி ஹாருல் கூறுகையில், காப்பார் கம்போங் தோக் முடாவில் உள்ள சமுதாயக் கூட அரங்கில் 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 179 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சபா பெர்னாம் சுங்கை ஆயர் தாவார் சமுதாயக் கூட அரங்கிலும், பாரிட் பாரு சமுதாயக் கூட அரங்கிலும் முறையே 111 மற்றும் 22 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 17-ம் தேதி, பூமிக்கு மிக அருகில் நிலவு வருவதால், கடலில் பேரலைகள் ஏற்படும் என்று தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.