Home Featured தமிழ் நாடு சசிகலாவின் முதல் வெளிநிகழ்ச்சி: இந்தியா டுடே கருத்தரங்கம்!

சசிகலாவின் முதல் வெளிநிகழ்ச்சி: இந்தியா டுடே கருத்தரங்கம்!

1101
0
SHARE
Ad

sasikala-panneer-selvam-india-today-conclaveசென்னை -இன்று திங்கட்கிழமை சென்னையில் தொடங்கிய ‘இந்தியா டுடே’ பத்திரிக்கைக் குழுமத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, அந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்ததன் மூலம், கட்சிக் கூட்டங்களுக்கு  அப்பாற்பட்டு, வெளிநிகழ்ச்சிகளிலும் சசிகலா கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.

இதே கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா மேடையில் உரையாற்றவில்லை. மேடையில் அமர்ந்து, நிகழ்ச்சியின் வரவேற்புரையை செவிமெடுத்த சசிகலா, பின்னர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். குத்து விளக்கின் மற்ற திரிகளை ஏற்ற அருகிலிருந்த முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை அழைத்த சசிகலா, தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா) உறுப்பினர் டாக்டர் மைத்ரேயனையும் குத்து விளக்கின் ஒரு திரியை ஏற்ற அழைத்தார்.

#TamilSchoolmychoice

அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் சசிகலா கட்சி அலுவலகம் வந்து கட்சிப் பிரமுகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொண்டதில்லை.

இன்றைய இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்டதுதான் சசிகலாவின் முதல் வெளிநிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது.

ஜெயலலிதாவின் புகைப்படக் கண்காட்சி

sasikala-panneer-selvam-india-today-coclaveநிகழ்ச்சி மேடையில் இந்தியா டுடே குழுமத்தின் நிர்வாக ஆசிரியர், சசிகலா, பன்னீர் செல்வம்….

“இந்தியா கொன்கலேவ் சவுத்” (India Conclave South) என்ற தலைப்பில் இந்தியா டுடே சென்னையில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தில் பலதுறைகளையும் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கின்றார்கள்.

தமிழக முதல்வரோடு சேர்த்து மொத்தம் 5 தென்னக முதலமைச்சர்களும் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க விழா முடிந்ததும், இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படக் கண்காட்சியை சசிகலா திறந்து வைத்தார். ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான திரையில் காட்டப்பட்டபோது, அவற்றை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தார் சசிகலா.

தொடக்க நிகழ்ச்சி முடிவடைந்ததும், சசிகலா புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டு முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆங்கிலத்தில் உரையை வாசித்து, தமிழ் நாடு சார்பான கருத்துகளை முன்வைத்தார்.

பின்னர் சசிகலா இந்தியா டுடே நிருபருக்கு வழங்கிய பிரத்தியேக தொலைக்காட்சிப் பேட்டியில் “அம்மா இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொண்டிருப்பார். இந்தியா டுடே பத்திரிக்கை நடுநிலையாக செய்திகளை வெளியிடுவதோடு, மற்ற மாநில மொழிகளிலும் வெளியிடுவது பாராட்டத்தக்கது” என்று கூறினார்.

சசிகலா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய முதல் பேட்டியாகவும் இது பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு