கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நாடாளுமன்றத்தில் செனட்டராகவும், 2008 முதல் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் அவர் சிறந்த மக்கள் பணிகளை ஆற்றி வருகிறார்.
மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து தீவிர மஇகா அரசியலில் ஈடுபட்ட அவர் படிப்படியாக கிளைத் தலைவர் முதல் பல பதவிகளைப் பெற்று இன்று மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக வலம் வருகிறார்.
தமிழ் மொழி இலக்கியங்களின் மீது ஆர்வமும் காதலும் கொண்ட அவர் தனது சரளமான, அழகுத் தமிழ் மேடை உரைகளுக்காக அடிக்கடி – உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும்- நாடப்படுபவர். பல உலக நாடுகளில் அவர் இலக்கிய உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். தனது கம்பீரமான மேடைத் தமிழ் உரைகளுக்காக ‘சொல்வேந்தர்’ என்ற சிறப்பு அடைமொழியையும் பெற்றிருக்கிறார்.
மலேசியாவில் கவிஞர் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவராக ஆண்டுதோறும் கண்ணதாசனுக்கு விழா எடுத்துக் கொண்டாடி வருகிறார்.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சரவணனுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!