Home நாடு பினாங்கு தைப்பூசம் : 131 ஆண்டுகளாகத் தொடரும் இரத ஊர்வல பாரம்பரியம்!

பினாங்கு தைப்பூசம் : 131 ஆண்டுகளாகத் தொடரும் இரத ஊர்வல பாரம்பரியம்!

70
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன்: எதிர்வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசம், பல்லாண்டுகளாக பினாங்கில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பினாங்கு தைப்பூசத்தின் முக்கியம் வெள்ளி இரத ஊர்வலம். முருகன் சிலையை உற்சவ மூர்த்தியாக ஏந்திய வெள்ளி ரதம், பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு 131 ஆண்டுகால பாரம்பரியத்தை அப்படியே பேணும். இந்தியாவில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும் இரத ஊர்வலம் தமிழர்கள் குடியேறிய மலேசியாவிலும் பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பினாங்கு, நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் அறங்காவலர் டாக்டர் ஏ. நாராயணன் இதுகுறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார்:

#TamilSchoolmychoice

“நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த இரதம், இந்தியாவின் தமிழ்நாடு, காரைக்குடியில் கட்டப்பட்டு, ஜனவரி 1894-இல் பினாங்குக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டது. இப்போது இந்த ஆண்டு தைப்பூசம் கொண்டாட்டத்திற்காக புதுப்பிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, இறுதியாக ஊர்வலத்திற்கு முன்பாக  பளபளப்பையும் பெறுகிறது இந்த இரதம். நாங்கள் 1894 முதல் அதே ரதத்தைப் பயன்படுத்தி வருகிறோம், இரத சக்கரங்கள் போன்ற சில பாகங்களை மட்டுமே மாற்றியுள்ளோம். இந்த ஆண்டு, தைப்பூசத்திற்கு மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு முன்பே இரதம் மீதான புதுப்பிப்புகள் நடந்தன. சேதமடைந்த பாகங்களை மட்டுமே பழுதுபார்த்தோம், மற்றபடி அதே கட்டமைப்பை பராமரிக்கிறோம்.”

“உடைந்த விளக்குகளையும் மாற்றினோம், முன்பு ரதத்தை அலங்கரிக்க எல்.இ.டி (LED) விளக்குகளுக்கு மாறத் திட்டமிட்டோம், ஆனால் அவை போதுமானளவு பிரகாசமாக இல்லை, எனவே மிகவும் பிரகாசமாக இருக்கும் வகையில், குறிப்பாக இரவில், ஊடுருவும் விளக்குகளை வைத்திருக்கிறோம்,” என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கூறியிருக்கிறார்.

பினாங்கு தங்க இரதம்

வழக்கம்போல், வெள்ளி இரதம் இரண்டு மாடுகளால் மாறி மாறி இழுக்கப்படும், மேலும் ஊர்வலம் முழுவதும் விலங்குகள் களைப்படையாமல் இருக்க ஒன்பது ஜோடி காளைகளுடன் 16 முறை மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு ஜோடி காளைகளும் 1 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு இரதத்தை இழுக்கும். ஏனெனில் பினாங்கு சாலையில் உள்ள நகரத்தார் கோவில் வீடு கோவிலில் இருந்து வாட்டர்ஃபால் சாலையில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் வரை ரதத்தின் முழு ஊர்வலம் 9 கிமீ தூரத்தை மட்டுமே கடக்கிறது. இரத ஊர்வலத்தில் காளைகளைப் பயன்படுத்துவது “நந்தி”க்கு மரியாதை செலுத்தும் ஒரு பாரம்பரியம்” என்றும் அவர் கூறினார்.

இந்து பாரம்பரியத்தில், நந்தி என்பது சிவபெருமானின் குடும்பத்தின் பாதுகாவலராகக் கருதப்படும் புனித காளையாகும். முருகன் சிவபெருமானின் மகனாக வழிபடப்படுகிறார்.

ஆரம்பத்தில் மரத்தால் ஆன இரதம் பினாங்கில் தைப்பூசம் கொண்டாட்டத்திற்காக 35 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பின்னர், 1894இல் வெள்ளி இரதமாக மாற்றப்பட்டது, 7.07 மீட்டர் உயரமும், ஐந்து டன் எடையும் கொண்டதாக இது திகழ்கிறது.

வெள்ளி இரதம் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 7 மணிக்கு லெபோ பினாங்கில் உள்ள நகரத்தார் கோவில் வீடு கோவிலில் இருந்து புறப்பட்டு, சூலியா தெரு, விக்டோரியா தெரு, மேக்ஸ்வெல் சாலை, ஜாலான் டாடுக் கேரமட், மேற்கு சாலை வழியாக சென்று நள்ளிரவுக்கு முன் நாட்டுக்கோட்டை செட்டியார் கோவிலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார்.

திரும்பும் பயணத்திற்கு, வெள்ளி இரதம் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாட்டுக்கோட்டை செட்டியார் கோவிலில் இருந்து புறப்பட்டு, பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு முன் ‘நகரத்தார் கோவில் வீடு’ என்னும் கோவிலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

பினாங்கில் தைப்பூசம் கொண்டாட்டம் தனித்துவமானது, ஏனெனில் இது தைப்பூசத்திற்கு ஒரு நாள் முன்னதாக “செட்டி பூசம்” என்று கொண்டாடப்படுகிறது, இது மாநிலத்தில் உள்ள செட்டியார் சமூகத்தினரால் மயில் காவடி மற்றும் வெள்ளி இரதத்துடன் ஓர் ஊர்வலம் நடைபெறும்.

காவடி சுமக்கும் பக்தர்கள் வெள்ளி இரத ஊர்வலத்தில் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறார்கள்.

பினாங்கு தைப்பூசம் இரண்டு ரதங்களின் ஊர்வலத்தைக் கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், பினாங்கு தீவில் தைப்பூசம் 2017 முதல் தங்க இரதம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகவும் உற்சாகமான நிலையில் கொண்டாடப்படுகிறது.

இது முருகனின் புனித ஆயுதமான “வேல்” ஏந்தி, குயின் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு (பிப்ரவரி 10) புறப்பட்டு, ஜாலான் கெபுங் பூங்காவில் உள்ள ஸ்ரீ அருள்மிகு பாலதாண்டாயுதபாணி கோவிலுக்கு வரும்.

பினாங்கு மாநிலத்தின் தைப்பூசக் கொண்டாட்டம், “தண்ணீர் பந்தல்” என்று அழைக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட கடைகளின் வரிசைகளுக்கும் பிரபலமானது, இவை பக்தர்களுக்கு இலவச சைவ உணவுகளையும் பானங்களையும் விநியோகிக்கின்றன.

முருகன் தனது தாய் பார்வதியிடமிருந்து புனித வேலைப் பெற்று, சூரபத்மன் என்னும் தீய சக்தியை அழித்து, மனிதகுலத்திற்கு செழிப்பையும் நல்வாழ்வையும் மீட்டெடுத்த நிகழ்வை நினைவுகூர, பிப்ரவரி 11ஆம் தேதி இந்துக்கள் தைப்பூசத்தை கொண்டாடுகிறார்கள்.

மலேசியாவில், தைப்பூசம் சிலாங்கூரில் உள்ள பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவில், பேராக்கில் உள்ள ஈப்போ அருள் சுப்பிரமணியர் கோவில் மற்றும் கெடாவில் உள்ள சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் கோவில் ஆகியவற்றிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரிலும் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.