![](https://selliyal.com/wp-content/uploads/2025/02/Thaipusam-batu-caves-chariot-09022025-1.png)
கோலாலம்பூர் : நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே (பிப்ரவரி 9) இரத ஊர்வலங்களுடன் நாடெங்கும் தைப்பூசம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி இரதம் நேற்றிரவு 9.00 மணிக்கு புறப்பட்டது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள், இரதத்தில் வீற்றிருந்த முருகப் பெருமானை தேங்காய்கள் உடைத்தும், அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர்.
பலர் பால்குடங்களுடன் இரத ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். ஏராளமான மக்கள் கூட்டத்தினால் இரதம் ஈப்போ சாலை மூன்றாவது மைலைக் கடப்பதற்கு காலை 10.00 மணியாகிவிட்டது.
மாலையில் வெள்ளி இரதம் பத்துமலையை அடைந்தது.
வழியெங்கும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உணவுகளும் பானங்களும் வழங்கப்பட்டன.
மஇகா தலைமையகத்தின் முன்னாலும் பந்தல் அமைக்கப்பட்டு இரதத்துடன் நடந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருடன் மஇகாவின் முக்கியத் தலைவர்களும் மஇகாவின் அன்னதானப் பந்தலுக்கு வருகை தந்தனர்.
இதே போன்று பினாங்கிலும் வெள்ளி, தங்க இரதங்களுடன் ஊர்வலங்கள் களை கட்டின.