Home உலகம் “காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும்; பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும்”  – டிரம்ப் அறிவிப்பு

“காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும்; பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும்”  – டிரம்ப் அறிவிப்பு

65
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் என்றும், அமெரிக்க உரிமையை அங்கு நிலைநாட்ட அமெரிக்கப் படைகளை அங்கு அனுப்பும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என அறிவித்தார்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இது தீர்வாகுமா என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது. இரண்டு-நாடு தீர்வை வலியுறுத்திய முந்தைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலிருந்து இந்த நகர்வு விலகிச் செல்வதாகும்.

மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீட்டைப் பற்றிய அவரது முந்தைய கருத்துகளுக்கும் முரணானதாக இது அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

டிரம்ப் காசாவை வணிக வாய்ப்பாகக் காண்கிறார் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. விரைவில் காசாவைப் பார்வையிட தான் திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்யும் எந்த பரிந்துரைகளையும் அரபு நாடுகள் நிராகரித்துள்ளன. இது இன அழிப்புக்கு சமமானது என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். சவுதி அரேபியா, பாலஸ்தீனிய நாட்டிற்கான தனது அசைக்கமுடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மலேசியாவும் காசா பகுதியை மேம்படுத்த உதவும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

இன்றைய (பிப்ரவரி 5) பத்திரிகையாளர் சந்திப்பில் காசாவைக் கையகப்படுத்தும் அறிவிப்பை விடுத்த டிரம்ப் தற்போது அங்குள்ள மக்கள் எங்கு போவார்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளை சாமர்த்தியமாகத் தவிர்த்தார்.

காசா மக்கள் மிக மோசமான சூழலில் வாழ்வதாகவும் அந்தப் பகுதியை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அங்குள்ள வெடிகுண்டு ஆயுதங்களை அகற்றவும் டிரம்ப் உறுதி வழங்கினார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது தவணைக்குப் பதவியேற்ற பின்னர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் வரவேற்கும் முதல் அயல்நாட்டுத் தலைவராக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திகழ்கிறார்.