சென்னை – இங்கு நடைபெற்றுவரும் இந்தியா டுடே கருத்தரங்கத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் (இந்திய நேரம்) கமலஹாசன் கலந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அதன் பின்னர் இந்தியா டுடே நிருபருக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் ஜல்லிக்கட்டு குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கமலஹாசன், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம். அதனை நான் ஆதரிக்கிறேன். அதன் உண்மையான பெயர் ஏறு தழுவுதல் என்பதாகும். அந்த ஜல்லிக்கட்டில் உண்மையாகவே ஈடுபட்ட வெகு சில நடிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகின்றேன். எவ்வளவு நேரம் நீங்கள் காளையை அணைத்துத் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் அந்தப் போட்டியின் நோக்கமே தவிர காளையைக் கொடுமைப்படுத்துவது அல்ல” என்று வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு மிருக வதை என மிருக நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே என இந்தியா டுடே நிருபர் தொடர்ந்து கேள்வி கேட்டபோது “அப்படியானால் நீங்கள் முதலில் பிரியாணியைத் தடை செய்ய வேண்டும்” என்றும் கமலஹாசன் பதிலளித்தார்.
“ஜல்லிக்கட்டு விளையாட்டில் மரணமடைபவர்களை விட அதிகமானவர்கள் வாகன விபத்துக்களினால் மரணமடைகிறார்கள். அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.