லங்காஸ்டர் – அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள லங்காஸ்டர் நகரிலுள்ள இந்திய வணிகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அமெரிக்க இந்தியர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் கன்சாஸ் நகரில் சில நாட்களுக்கு முன்னர்தான் ஓர் இந்தியர் இன விரோதம் காரணமாக கொல்லப்பட்ட அடுத்த சில தினங்களில் இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது இந்தியர்களின் பாதுகாப்புத் தன்மை குறித்த அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்சாஸ் நகரில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு ஸ்ரீனிவாஸ் என்ற ஆந்திர மாநிலத்து தொழில்நுட்ப நிபுணர் இனவிரோதம் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நண்பரும் கடுமையாக அந்தத் தாக்குதலில் காயமுற்றார்.
தென் கரோலினா மாநிலத்தின் லங்காஸ்டர் நகரைச் சேர்ந்த ஹார்னிஷ் பட்டேல் என்ற 43 வயது மளிகைக் கடைக்காரர் நேற்று தனது இல்லத்தின் முன் சுட்டுக் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கக் காணப்பட்டார்.
இருப்பினும், இந்தக் கொலைக்கு இன விரோதம் காரணமில்லை என வழக்கை விசாரித்து வரும் உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
தனது இல்லத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தனது கடையைச் சாத்தி விட்டு, தனது காரில் இல்லம் திரும்பிய பட்டேல், வீட்டிற்குள் போக எத்தனித்தபோது, கொலைகாரனால் தடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.