கோலாலம்பூர் – அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) அறிவித்த இந்தியர்களுக்கான செயல் முன்வரைவுத் திட்டம் முறையாக அமுலாக்கப்பட ஆட்சிக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அதன் தலைவராக சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் செயல்படுவார் என்றும் பிரதமர் நஜிப் அறிவித்தார்.
“இனி இந்த புளுபிரிண்ட் செயல்படவில்லை சுப்ராவைப் பாருங்கள்” என சிரித்துக் கொண்டே கிண்டலாகக் கூறிய நஜிப், “சுப்ரா அமுலாக்கத்திற்கான ஆட்சிக்குழுவுக்குத் தலைவராக இருப்பார் என்றாலும் நானும், துணைப் பிரதமரும் இந்த புளுபிரிண்ட் அமுலாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவோம். இந்தியர்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு நான் தொடர்ந்து தலைவராக இருந்து செயல்பட்டு வருவேன்” என்றும் உறுதியளித்தார்.
இதுவரை மலேசிய வரலாற்றில், பிரதமர் ஒருவர் இந்தியர்களுக்கான அமைச்சரவைச் செயலாக்கக் குழுவுக்குத் தலைவராக இருந்ததில்லை என்றும் பிரதமர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்த முன்வரைவுத் திட்டம் தேசிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால உழைப்பு என்றும் குறிப்பிட்ட பிரதமர், 2015-ஆம் ஆண்டு முதற்கொண்டே, தனது அரசாங்கம், பல்வேறு திட்டங்களின் வழி இந்தியர்களின் நல்வாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.