Home Featured நாடு “மதப் பிரச்சனையாக்க வேண்டாம்” – இராமசாமிக்கு ரிசால் மரிக்கான் எச்சரிக்கை

“மதப் பிரச்சனையாக்க வேண்டாம்” – இராமசாமிக்கு ரிசால் மரிக்கான் எச்சரிக்கை

1025
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – மதப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் செபராங் பிறை போலிடெக்னிக் விவகாரத்தில் போலிடெக்னிக் நிர்வாகத்தை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு, அதை அரசியலாக்கி பினாங்கு துணை முதல்வர் ஏன் மதப் பிரச்சனைகளை உருவாக்குகிறார் என பினாங்கு அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவரும், துணை வெளியுறவு அமைச்சருமான டத்தோ ரிசால் மரிக்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

செபராங் பிறை போலிடெக்னிக் நிர்வாகத்தை அணுகி உண்மையான நிலவரத்தைக் கண்டறிய தான் முயற்சி எடுத்ததாகவும் அதன்படி போலிடெக்னிக்கில் இயங்கும் உணவகங்கள் (கேண்டீன்) குத்தகை 30 ஜூன் 2017-ஆம் தேதியோடு முடிவடைவதாகவும், 2017-2019 தவணைக்கான குத்தகைகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதமே விடுக்கப்பட்டதாகவும் ரிசால் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கோபி கிருஷ்ணனும், இராமசாமியும் வழக்கறிஞர்களோடு இணைந்து ஜூன் 29-ஆம் தேதி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது…

“கோபி கிருஷ்ணனின் குத்தகை மட்டுமல்ல, மேலும் 6 உணவகங்களின் குத்தகைகளும் 30 ஜூன் 2017-ஆம் தேதியோடு முடிவடைந்திருக்கின்றன. எனவே, கோபி கிருஷ்ணன் முஸ்லீம் அல்ல என்ற காரணத்திற்காக மட்டும் அவரது குத்தகை இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல” என்றும் ரிசால் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ரிசால் விடுத்திருக்கும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கும் மற்ற சில முக்கிய அம்சங்கள்:

  • கோபி கிருஷ்ணனின் குத்தகை விண்ணப்பம் மட்டுமல்ல – மேலும் 3 மலாய்க்காரர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
  • போலிடெக்னிக்கில் உணவகம் நடத்துவதற்கு தேவையான இஸ்லாமிய முறைப்படியான உணவு தயாரிப்பதற்கான நிபந்தனையை கோபி கிருஷ்ணன் பூர்த்தி செய்யவில்லை என்ற காரணத்திற்காகத்தான் அவரது குத்தகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
  • ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்பது முஸ்லீம்களுக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, ஜாகிம் எனப்படும் இஸ்லாமிய மத இலாகாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் எந்த இனத்தவரும் ஹலால் சான்றிதழ் பெற முடியும். எனவே, இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ இந்த விவகாரம் கையாளப்படவில்லை என்பது தெளிவாகிறது.
  • கடந்த ஜூன் 29-ஆம் தேதி கோபி கிருஷ்ணனும், துணை முதல்வர் இராமசாமியும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டிருக்கும் உரையாடல்கள் தேச நிந்தனைக்குரியவை, மத ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டிவிடக் கூடியவையாகும். இதற்கு தடை போடாவிட்டால் இதனால் இனங்களுக்கிடையில் பதட்டமும், தவறான புரிந்துணர்வும், மதப் பிரச்சனைகளும் உருவாகும்.
  • இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராமசாமி, கல்வி அமைச்சுக்கு எதிராகவும், மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் இந்திய சமுதாயத்தின் மத்தியில் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியைத் தூண்ட வேண்டாம் என அறிவுரை கூறவும், கேட்டுக் கொள்ளவும் விரும்புகிறேன்.
  • இராமசாமி மாநிலத்தின் துணை முதல்வர் என்பதோடு, ஆட்சிக் குழு உறுப்பினருமாவார். எனவே, அவருக்கு இந்த விவகாரத்தில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டு செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியை அணுகி முறையான விளக்கங்கள் பெற்றிருக்கலாம். உண்மையான நிலவரத்தை கேட்டு அறிந்து கொண்டிருக்கலாம். அதை விடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டி, அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தனிநபர்கள் மீதும், சம்பந்தப்பட்ட போலிடெக்னிக் மீதும் கூறுவதும், சட்ட நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுப்பதும் பொறுப்பான செயல் அல்ல.
  • அதுமட்டுமல்ல. இராமசாமி துணை முதல்வர் என்பதோடு, ஓர் அரசாங்கப் பல்கலைக் கழகத்தில் முன்னாள் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் என்ற முறையில் அவர் கூடுதல் பொறுப்போடு செயல்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை அணுகி, இரு தரப்பு நியாயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு பாரபட்சமின்றி இந்த விவகாரத்தை அணுகியிருக்க வேண்டும். ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் கேட்டுக் கொண்டு, உடனே இராமசாமி தானே தீர்ப்பு வழங்கக் கூடாது.
  • நெருப்புக்கு சமமான இனப் பிரச்சனையில் விளையாட வேண்டாம் என இராமசாமிக்கு நான் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் தன்மைக்கும், நிலவி வரும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வண்ணமும், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நிலவி வரும் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவரைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.