ஜோர்ஜ் டவுன் : 2010-ஆம் ஆண்டில் பினாங்கில் தகவல் சுதந்திரம் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது பினாங்கு மேல்முறையீட்டு வாரியம். அந்த வாரியத்தின் தலைவராக அண்மையில் பினாங்கின் 2-வது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங்கின் மாமனார் பால்தேவ் சிங் குர்ச்சரான் சிங் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் – காரணம் இது நெருங்கிய உறவினர்களுக்கு அரசாங்க சலுகைகள் வழங்குவதற்கு ஒப்பாகும் என உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பால்தேவ் சிங் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பால்தேவ் சிங் பினாங்கு மாநிலத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராவார்.
உரிமை கட்சியின் தலைமைச் செயலாளர் சதீஸ் முனியாண்டியும் பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ, ஜக்டீப் சிங்கின் மாமனார் குறித்த நியமனம் பற்றி விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை (30 மே) பினாங்கு சட்டமன்றம் பினாங்கு மேல்முறையீட்டு வாரியத்திற்கு 6 உறுப்பினர்களை நியமித்தது. பால்தேவ் சிங்கை அந்த வாரியத்தின் தலைவராகவும் நியமித்தது.
வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ஃபாரிட் அப்துல் கபூர் துணைத் தலைவராகவும், ஹாரிண்டர் சிங் மல்கிட் சிங், கேரோலின் ஓ, நாகரெத்தினம் ரெங்கசாமி பிள்ளை, ரெஜினா அமலோர்பாவா, மேரி அபூர்வசாமி ஆகியோரும் அந்த வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
பினாங்கு மாநிலத்தின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநில அலுவலகங்கள் குறித்த தரவுகளைக் கோரலாம். அவ்வாறு மறுக்கப்படும் தகவல்கள் குறித்த மேல்முறையீடுகளை மேற்குறிப்பிட்ட வாரியம் விசாரிக்கும்.
மேற்குறிப்பிட்ட வாரிய உறுப்பினர்களையும் தலைவரையும் நியமிக்கும் தீர்மானத்தை ஜக்டீப் சிங்கே பினாங்கு சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.