Home நாடு பெர்சாத்து கட்சியின் பதவியிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இனி இடைத் தேர்தலா?

பெர்சாத்து கட்சியின் பதவியிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இனி இடைத் தேர்தலா?

164
0
SHARE
Ad
வான் அகமட் பைசால்

கோலாலம்பூர் : எதிர்பார்த்தபடியே, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வார் இப்ராகிமை ஆதரித்ததால் அந்தக் கட்சியிலிருந்து உறுப்பிய நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த அறிவிப்பை பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் வான் அகமட் பைசால் கமால் வெளியிட்டுள்ளார்.

கட்சிக்கு விசுவாசம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றில் கையெழுத்திட அவர்கள் மறுத்ததால், அவர்களின் கட்சி உறுப்பியமும் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியும் இயல்பாகவே ரத்தாகிறது என வான் அகமட் பைசால் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் இதன் காரணமாக அந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளால் அவர்கள் கட்சித்தாவல் சட்டத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கிறார்கள் என்பதை மக்களவைத் தலைவர் அறிவிக்க வேண்டும்.

அவர் அவ்வாறு அறிவிக்காவிட்டால், அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தங்களின் பதவிகளில் நீடிப்பார்கள். மக்களவைத் தலைவரின் முடிவை எதிர்த்து பெர்சாத்து நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு.

சர்ச்சைக்குரிய 6 பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுல்காப்பெரி ஹானாபி (தஞ்சோங் காராங்), சைட் அபு ஹூசின் ஹாபிஸ் சைட் அப்துல் ஃபாசால் (புக்கிட் கந்தாங்), இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட் (கோலகங்சார்), முகமட் அசிசி அபு நைம் (குவா மூசாங்), சாஹாரி கெச்சிக் (ஜெலி), சுஹாய்லி அப்துல் ரஹ்மான் (லாபுவான்) ஆகியோராவர்.

பெர்சாத்து  கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 58 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு விசுவாசம் தெரிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கடந்த ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தார்.