Home இந்தியா வேலூரில் உதயநிதியைக் களமிறக்கத் தயங்கும் திமுக

வேலூரில் உதயநிதியைக் களமிறக்கத் தயங்கும் திமுக

1122
0
SHARE
Ad

வேலூர் – எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அனல் பறக்கும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், திமுக தரப்பில் மட்டும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை பின்பற்றப்படுவது அரசியல் பார்வையாளர்களிடையே உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் வட்டாரம் ஒருபக்கம் களமிறங்கி பரப்புரை நிகழ்த்த, இன்னொரு புறத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சுற்றிச் சுழன்றுவர, திமுக தரப்பிலோ மு.க.ஸ்டாலின் தலைமையில் பரப்புரைகள் நடத்தப்படுகின்றன. காலையில் தனது நடைப் பயிற்சியின் ஊடே மக்களைச் சந்திப்பதை வழக்கமாகிக் கொண்டுள்ளார் ஸ்டாலின்.

ஆனால், அண்மையில்தான் திமுகவின் அடுத்த தலைவர் என்ற அளவுக்கு முன்னுக்கு நிறுத்தப்பட்டு இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மட்டும் நேரடியாக பிரச்சாரக் களத்தில் காணப்படவில்லை.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஒவ்வொரு வேட்பாளரையும் தனக்குப் பின்னால் வாகனத்தில் கைகூப்பி நிற்கவைத்து பரப்புரையை மேற்கொண்டார் உதயநிதி. தேர்தல் முடிந்ததும் திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்குக் காரணமே உதயநிதிதான் என்றும் அதனால்தான் அவரை இளைஞர் அணியின் செயலாளராக நியமித்ததும் பொருத்தம்தான் என்றும் புகழ்பாடினார்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

ஆனால், அத்தகைய வலிமை வாய்ந்த பிரச்சார பீரங்கி வேலூர் தொகுதியில் மட்டும் ஒதுங்கியிருப்பது ஏன்?

பொதுமக்கள் மத்தியில் உதயநிதி நியமனத்திற்கு எதிர்ப்பு

உதயநிதி ஒதுங்கி இருப்பதற்குக் காரணம், அவரது இளைஞர் அணிச் செயலாளர் நியமனத்திற்குப் பின்னர் சமூக ஊடங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அவரைப் போட்டுக் காய்ச்சி எடுத்ததுதான். ஸ்டாலினின் மதிப்பையே இந்த நியமனம் குலைத்தது என்பதோடு, திமுக குடும்பக் கட்சிதான் என்பதை மறுஉறுதிப்படுத்தியது இந்த நியமனம்.

பரவலான கணிப்புகளை வைத்துப் பார்க்கும்போது வேலூரில் அதிமுகவே வெல்லும் என்பதுதான் பலரின் பார்வையாக இருக்கிறது. மோடியே மீண்டும் பிரதமரானது, டிடிவி தினகரனின் அமமுக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் மய்யம் கட்சிகள் போட்டியிடாதது, ராகுல் காந்தி ஒதுங்கியது – இப்படியாக எல்லாம் சேர்ந்து அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருத்துகள் கூறப்படுகின்றன.

எனவே, உதயநிதி தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கி திமுக தோல்வியுற்றுவிட்டால், அதற்கு ஒட்டுமொத்தக் காரணம் உதயநிதியின் நியமனம்தான் என்று கூறிவிடுவார்கள். அதேவேளையில் உதயநிதி பரப்புரையில் ஈடுபடாமல் திமுக தோல்வியடைந்தால், உதயநிதி பிரச்சாரம் செய்திருந்தால் ஒருக்கால் திமுக வெற்றியடைந்திருக்கக் கூடும் என திமுக அனுதாபிகள் நியாயம் கற்பிப்பார்கள்.

வேலூர் இடைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. இறுதி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் மனம் மாறி பிரச்சாரத்துக்காக இறங்குவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு