Home அரசியல் துணைத் தலைவர் பதவிக்கு சரவணனுக்கு ம.இ.கா. கூட்டரசுப் பிரதேச மாநிலம் ஆதரவு!

துணைத் தலைவர் பதவிக்கு சரவணனுக்கு ம.இ.கா. கூட்டரசுப் பிரதேச மாநிலம் ஆதரவு!

570
0
SHARE
Ad

M Saravananகோலாலம்பூர், மே 28 கட்சியின் தேர்தல்கள் அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ம.இ.காவில் தேர்தல் சூடு இப்போதே பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

#TamilSchoolmychoice

கட்சியின் தேசியத் துணைத் தலைவராக ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவரும், நடப்பு உதவித் தலைவருமான எம்.சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து ம.இ.கா கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தொகுதிகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இதனை அறிவித்த ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநில செயலாளரான எஸ்.ராஜா நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள 12 தொகுதிகளின் தலைவர்களும் சரவணனுக்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்திக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தொகுதிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால் பழனிவேலுவுக்கு ஆதரவு இல்லை

இருப்பினும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள இந்த தொகுதிகள் தேசியத் தலைவர் பதவிக்கு பழனிவேலுவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நடப்பு துணைத் தலைவரான டாக்டர் சுப்ரமணியம் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்கள் பழனிவேல் மீண்டும் கட்சியின் தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென தீர்மானங்களை முன்மொழிந்துள்ளன.

ஆனால் ம.இ.கா கூட்டரசுப் பிரதேசம் இத்தகைய தீர்மானம் எதனையும் விவாதிக்கவும் இல்லை, முன்மொழியவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைவர் பதவிக்கு மாநிலத் தலைவர் டத்தோ சரவணன் செய்யும் எந்த முடிவையும் மாநில தொடர்புக் குழு ஆதரிக்கும் என்றும் ராஜா அறிவித்துள்ளார். இப்போதைக்கு தேசியத் தலைவர் பதவி வேட்பாளர் மீதிலான எங்களின் முடிவை ஒத்தி வைத்துள்ளோம் என்றும் ராஜா கூறியுள்ளார்.

ம.இ.கா கூட்டரசுப் பிரதேசத்தின் இந்த தீர்மானத்தின் மூலம், தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிட டாக்டர் சுப்ரமணியத்திற்கு நெருக்குதல்கள் மேலும் கூடியுள்ளது.

ஒருவேளை டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவர் பதவிக்குப் பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிடாவிட்டாலும், சரவணன் டாக்டர் சுப்ராவை எதிர்த்து துணைத் தலைவர் பதவிக்கு நிற்பாரா அல்லது துணைத் தலைவர் பதவி காலியானால் மட்டுமே அந்த பதவிக்குப் போட்டியிடுவாரா என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.