Home அரசியல் வேதமூர்த்தியால் முக்கியத்துவத்தை இழக்கும் “மக்கள் சக்தி” கட்சி – ம.இ.காவுடன் இணையுமா?

வேதமூர்த்தியால் முக்கியத்துவத்தை இழக்கும் “மக்கள் சக்தி” கட்சி – ம.இ.காவுடன் இணையுமா?

733
0
SHARE
Ad

Thanenthran-Sliderமே 29 – மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் தற்போது ஓர் இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய தனேந்திரன், தேசிய முன்னணி அரசாங்கத்துடனும் பிரதமர் நஜிப்புடனும் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

மக்கள் சக்தி கட்சியைத் தொடக்கி வைத்ததே நஜிப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு மாற்று சக்தியாக மக்கள் சக்தி கட்சி பார்க்கப்பட்டது. இருப்பினும் நாளடைவில் அந்த கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அந்த கட்சியில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் வேதமூர்த்தி நாடு திரும்பி, நேரடியாக ஹிண்ட்ராப் இயக்கத்தை வழிநடத்த ஆரம்பித்தவுடன் மக்கள் சக்தி கட்சியும் தனது முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது.

தேசிய முன்னணிக்கு ஆதரவாக நாடு முழுமையிலும் இயங்கினாலும், வலுவான ஓர் அரசியல் பங்காளித்துவ கட்சியாக மக்கள் சக்தி கட்சியால் உருமாற முடியவில்லை.

முக்கியத்துவத்தை இழந்த மக்கள் சக்தி கட்சி

அன்று தனேந்திரன் மக்கள் சக்தி கட்சியை அமைத்து தேசிய முன்னணியோடு இணைந்தபோது, அவரை, துரோகம் இழைத்துவிட்டார், சோரம் போய்விட்டார் என்றெல்லாம் வசைபாடிய வேதமூர்த்தி குழுவினரே இன்றைக்கு, தேசிய முன்னணியோடு இணைந்து, கை கோர்த்து, துணையமைச்சர் பதவியையும் அடைந்து விட்டனர்.

இதனால், வேதமூர்த்தியே இணைந்து விட்டபிறகு இனிமேல் மக்கள் சக்தி கட்சிக்கு இந்திய சமுதாயத்திலும், ஹிண்ட்ராப் ஆதரவாளர்களிடையேயும் முக்கியத்துவமும் இருக்காது.

ஹிண்ட்ராப் ஆதரவாளர்களை தேசிய முன்னணிக்கு ஆதரவாக மாற்றும் பணியையும் அது இனி  மேற்கொள்ளத் தேவையில்லை.

கட்சிகளை ஒன்றிணைக்க பழனிவேல் அழைப்பு

இந்த நிலையில்தான், இந்தியர் சார்பு கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என ம.இ.கா. தேசியத் தலைவர்ஜி.பழனிவேல் அண்மையில் அறைகூவல் விடுத்துள்ளார்.

இருப்பினும் இந்த அறைகூவலுக்கு சாதகமான, திருப்திகரமான வரவேற்பு சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்து இதுவரை வரவில்லை.

இதுகுறித்து ஃபிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளத்திடம் பேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் இந்த முன்மொழிதலுக்கு ஆதரவாக முதலில் மக்கள் முன்வரவேண்டும். கட்சியோ, கட்சித் தலைவர்களோ மட்டும் இணைப்பு பற்றி பேசுவது போதுமானதாக இருக்காது. இறுதியில் பயன்பெறப் போவது இந்திய சமுதாயமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கட்சிகள் இணைப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், இது பற்றி கலந்தாலோசிக்க இதுவரை தங்களுக்கு எந்த ஒரு முறையான அழைப்பும் வரவில்லை என்றும் அப்படி வந்தால் கட்சியின் உறுப்பினர்களையும், மத்திய செயலவை உறுப்பினர்களையும் கலந்தாலோசித்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தனேந்திரன் கூறியுள்ளார்.

இனி மக்கள் சக்தி போகும் வழியென்ன?

அப்படியே, ம.இ.காவிலிருந்து இணைவதற்கு அழைப்பு வந்து, ம.இ.காவில் இணையும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அதன் பின்னர், மக்கள் சக்தி கட்சியை வழி நடத்துவதிலும், மக்களிடையே ஆதரவு திரட்டுவதிலும், மக்கள் கட்சியின் தலைமைத்துவம் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கும்.

காரணம், தற்போது ஹிண்ட்ராப் அதிகாரபூர்வ இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதாலும், வேதமூர்த்தி நேரடியாகவே தேசிய முன்னணி அரசாங்கத்தில் துணையமைச்சராக அங்கம் வகிப்பதாலும், மக்கள் சக்தி கட்சிக்கு இனி தேசிய முன்னணியின் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் குறையும்.

அதோடு, பழைய ஹிண்ட்ராப் இயக்கத்தினரை தேசிய முன்னணிக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டிய வேலையும் இனி மக்கள் சக்திக்கு இல்லை.