Home நாடு வேதமூர்த்திக்கு பதிலாக புதிய துணையமைச்சர்? நல்லாவா? தனேந்திரனா? ம.இ.கா. பிரதிநிதியா?

வேதமூர்த்திக்கு பதிலாக புதிய துணையமைச்சர்? நல்லாவா? தனேந்திரனா? ம.இ.கா. பிரதிநிதியா?

1120
0
SHARE
Ad

Thanenthran-Sliderகோலாலம்பூர், பிப்ரவரி 17 – பதவி விலகியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்திக்கு பதிலாக மற்றொருவர் புதிய துணையமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் காஜாங் இடைத் தேர்தல் சமயத்தில் இந்திய வாக்காளர்களைக் கவரும் பிரச்சார உத்திகளில் ஒன்றாக அத்தகைய நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்தியர் விவகாரங்களை கவனிப்பதற்கு, ம.இ.காவிற்கு வெளியிலிருந்து ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக இந்திய சமுதாயத்திலிருந்து எழுந்து வந்துள்ள கோரிக்கைக்கு ஏற்பவே, வேதமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், பிபிபி கட்சியின் சார்பாக பெரும்பாலும் இந்தியர் ஒருவரே தொடர்ந்து துணையமைச்சராக நியமிக்கப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது வேதமூர்த்தி ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்குப் பதிலாக இந்தியர் விவகாரங்களைக் கவனிப்பதற்கும், கையாள்வதற்கும் மற்றொருவரை, ம.இ.கா.விற்கு வெளியிலிருந்து நியமிப்பதன் மூலம் இந்திய சமுதாயத்தின் ஆதரவைத் தொடர்ந்து பெற முடியும் என்ற கண்ணோட்டத்தில் நஜிப்பின் தலைமைத்துவம் இருந்து வருகின்றது.

இந்திய சமுதாயத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் ம.இ.கா உறுப்பினர்கள் அல்லாதவர்கள், ம.இ.காவுக்கு எதிர்ப்பானவர்கள், ஆனால் அதே சமயத்தில் எதிர்க்கட்சிகளை ஆதரிக்காதவர்கள் என்பதை தேசிய முன்னணியின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது.

புதிய துணையமைச்சர் யார்?

இந்நிலையில், வேதமூர்த்திக்குப் பதிலாக மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ கே.எஸ்.நல்லா துணையமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற ஒரு பக்கம் ஆரூடம் நிலவ, இன்னொரு புறத்தில் மக்கள் சக்தியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் வேதமூர்த்திக்குப் பதிலாக நியமிக்கப்படுவார் என ஒரு சிலர் எதிர்பார்க்கின்றனர்.

ஹிண்ட்ராப் தலைவரான வேதமூர்த்தி பதவி விலகியுள்ள காரணத்தால், அதே ஹிண்ட்ராப் பின்னணியைக் கொண்ட மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன் துணையமைச்சராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. தனேந்திரன் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதோடு, வேதமூர்த்திக்கு துணையாக ஹிண்ட்ராப் இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிண்ட்ராப்பின் முக்கிய தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கமுந்திங் தடுப்பு முகாமில் இருந்த வேளையில், வேதமூர்த்தியோ பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் புகுந்திருக்க, உள்நாட்டில் ஹிண்ட்ராப்பின் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர், ஒருங்கிணைத்தவர், தனேந்திரன்தான் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

எனவே, ஹிண்ட்ராப் போராட்டங்களோடு தொடர்புள்ள தனேந்திரனே வேதமூர்த்திக்குப் பதிலாக துணையமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரிகின்றது.

இதற்கிடையில், ம.இ.கா சார்பில் செனட்டர்களாக இருப்பவர்களில் ஒருவரும் வேதமூர்த்திக்கு பதிலாக துணையமைச்சராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகின்றது.

வேதமூர்த்திக்குப் பதிலாக ம.இ.காவுக்கு அந்த பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ம.இ.காவை மேலும் பலப்படுத்த முடியும் என்றும்   ம.இ.கா தலைமைத்துவம் பிரதமர் நஜிப்பை வலியுறுத்தி வருவதாகவும் சில தரப்புகள் தெரிவித்துள்ளன.