கோலாலம்பூர், ஏப்ரல் 3 – மலேசியாவின் பிரபல கேலிச்சித்திரக்காரர் (cartoonist) ‘சூனார்’ என்று அழைக்கப்படும், சுல்கிப்ளி அன்வார் ஹேக் மீது இன்று நீதிமன்றத்தில் 9 தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மலேசிய நீதித் துறையைக் குறை கூறி டுவிட்டர் வழி சூனார் (படம்) அனுப்பிய செய்திகளுக்காக அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சூனார் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் “இது சூனார் வேண்டுமென்றே தேடிக் கொண்டது. அவர்தான் இத்தகைய டுவிட்டர் செய்திகளை அனுப்பினார். அவர் இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றார். எனவே மற்றவர்களும் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“நாங்கள் யார் மீதும் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளைக் கொண்டு வருவதில்லை” என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
படம்: EPA