கோவா, ஏப்ரல் 3 – கோவாவில் ஆயத்த ஆடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையை கண்காணிக்கும் வகையில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி கண்டுபிடித்தார். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானி, விடுமுறையை கழிப்பதற்காக தனது கணவருடன் கோவா சென்றுள்ளார். அங்கு அவர் ஃபேப் இந்தியா ஸ்டோர் என்ற ஆயத்த ஆடை கடை ஒன்றில் துணிகளை வாங்கி உள்ளார். அங்கு வாங்கிய ஆடைகளை போட்டு பார்ப்பதற்காக, அங்குள்ள உடை மாற்றும் அறைக்குச் செல்லும் முன், தனது உதவியாளர் ஒருவரை அனுப்பி அந்த அறையை பார்வையிடச் செய்துள்ளார். அப்போது அந்த அறையின் உள்பகுதியை நோக்கி கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த இரானி, உடனடியாக உள்ளூர் பா.ஜ சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் லொபோவை தொலைபேசியில் அழைத்து நடந்த விவரங்களைக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த மைக்கேல், அந்த கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து அந்த கேமராவையும், ஹார்டு டிஸ்க்கையும் கைப்பற்றினார்.
இந்நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த கடை ஊழியர்கள் ரகசிய கேமரா மூலம் வாடிக்கையாளர்கள் உடை மாற்றுவதை படம் பிடித்து அந்த கடையில் உள்ள கணினியில் பதிவு செய்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.