சென்னை, ஜூலை3- சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் நேற்று முன்தினம் பயணித்த ஸ்டாலின், வாலிபர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தது போன்ற காணொளிக் காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவின.
ஸ்டாலினின் நடவடிக்கையைக் கண்டித்து, முதல்வர் ஜெயலலிதாவும் அறிக்கை வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “ நான் அவரை அடிக்கவில்லை; தள்ளிப் போ என்று தான் கையசைத்தேன்” என்று நேற்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், ஸ்டாலினிடம் அடி வாங்கியதாகச் சொல்லப்பட்ட கார்த்திக் என்னும் பயணி, இன்று செய்தியாளர்கள் முன் தோன்றி இப்பிரச்சினை குறித்துத் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
“நான், சென்னை கிண்டியில் வசிக்கிறேன்; அடையாறில் உள்ள தனியார் கல்லுாரியில், (காணொளி உருவாக்கம் தொடர்பான)’விஷூவல் கம்யூனிகேஷன்’ பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.
மெட்ரோ தொடர்வண்டியில் ஏறிச் சென்று திரும்பி வர விரும்பினேன். சம்பவத்தன்று நான், ஆலந்துாரில் இருந்து புறப்பட்டுக் கோயம்பேடு சென்றேன். மீண்டும் அங்கிருந்து ஆலந்துாருக்குத் திரும்பினேன்.
அப்போது, நான் இருந்த பெட்டியில், திடீரென ஸ்டாலின் வந்தார்.அவர் என் அருகில் வந்து நின்றதும், எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஸ்டாலினைத் திடீரெனப் பார்த்ததும் எனக்குக் கை, கால் ஓடவில்லை. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக, சற்றுப் பின்னால் நகர்ந்தேன். அப்போது, அங்குஉட்கார்ந்து கொண்டு பயணம் செய்த பெண்ணின் காலைத் தெரியாமல் மிதித்து விட்டேன்; உடனே அந்தப் பெண், ‘அம்மா’ எனக் கத்தினார்.
அந்தப் பெண் கத்தியதைப் பார்த்த, ஸ்டாலின் உடனே என்னை, ‘இந்தப் பக்கம் போ’ எனத் தன் கையை வைத்து வழியைக் காட்டினார். நாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்தோம்; அதனால் அவரது கை என்மீது பட்டது.அவ்வளவு தான்!
என்னை ஸ்டாலின் அடிக்கவும் இல்லை; தள்ளவும் இல்லை. ‘இந்தப் பக்கம் போ’ எனக் கைகாட்டி, வழி காட்டியதைப் படம் பிடித்து, பெரிய பிரச்சினையக் கிளப்பி விட்டனர். வேறு எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் அங்கு நடக்கவில்லை” என்றார்.
இதன்பிறகாவது, இந்தச் சாதாரணப் பிரச்சினையை மற்றவர்கள் காக்கா முட்டைப் படம்போல் பெரிதுபடுத்தி அரசியலாக்காமல் இருந்தால் சரி தான்!