கோலாலம்பூர், ஜூலை 20 – கடந்த சனிக்கிழமை ஜூலை 18ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர்கள் சுமார் 25 பேரைக் கொண்ட சந்திப்புக் கூட்டம் புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியில் நடந்தேறியிருக்கின்றது.
அந்தக் கூட்டத்தில் மஇகாவில் அரங்கேறி வரும் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தங்களின் தற்போதைய நிலைமை என்ன – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – என்பது குறித்த விரிவான விவாதங்கள் நடைபெற்றதாக நம்பப்படுகின்றது.
முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை
இந்த முக்கியக் கூட்டத்தில் பழனிவேல் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரை நாங்கள் அழைக்கவில்லை என்றும் அப்போதுதான் நாங்கள் அனைவரும் மனம் விட்டு கட்சியின் நிலைமை குறித்தும் தங்களின் எதிர்காலம் குறித்தும் ஒளிவு மறைவின்றி பேச முடியும் என்ற காரணத்தினால்தான் அவர் இல்லாமல் கூட்டம் நடைபெற்றது என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பழனிவேலுவின் ஆதரவாளர் ஒருவர் ‘செல்லியல்’ தகவல் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பழனிவேலுவின் தரப்பில் முக்கியத் தலைவர்களான டத்தோ எஸ்.சோதிநாதன், முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ எஸ்.முருகேசன், செனட்டர் டத்தோ வி.சுப்ரமணியம் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதனால், முன்னாள் ஜோகூர் மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் தெரிகின்றது.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்ற தலைவர்கள் அனைவரும், ஏற்கனவே தங்களுக்கிருந்த முக்கிய அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் அவர்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், இருப்பினும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்பட அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் டான்ஸ்ரீ பாலா கூட்டத்தில் அறிவித்திருக்கின்றார்.
சுந்தர் சுப்ரமணியம் கலந்து கொள்ளவில்லை
வேறு சில முக்கிய பழனிவேல் ஆதரவாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. அவ்வாறு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றொரு தீவிர பழனிவேல் ஆதரவாளர் சுந்தர் சுப்ரமணியம் ஆவார். முன்னாள் மஇகா தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் புதல்வரான சுந்தர் சுப்ரமணியம், பழனிவேலுவின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார்.
மஇகா தலைமைத்துவப் போராட்டத்தில் நான் எப்போதும் பழனிவேலுவின் பக்கம்தான் நிற்பேன் என அண்மையில் சுந்தர் பகிரங்க அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தின் கீழ் மஇகா தலைமையகம் நடத்திய மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் கடந்த ஜூலை 12ஆம் தேதி மஇகா பழைய கிள்ளான் சாலைக் கிளையின் தலைவராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து அந்தக் கிளையின் தலைவராகவும் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூட்டத்தின் முக்கிய முடிவு # 1 – கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு வேண்டாம்
கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்களின் கருத்துக்களை தயங்காமல் கடுமையான முறையில் முன்வைத்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செல்லியலிடம் தெரிவித்தனர்.
எப்போதும் நான்கு பேர் மட்டும் அவர்களுக்குள் கூடி எடுத்த முடிவுகளினால்தான் நமக்கு இத்தகைய இக்கட்டான அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதாகவும், இதுபோன்று அனைவரும் கூடிப் பேசி முடிவுகள் எடுத்திருந்தால், பல மோசமான விளைவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கின்றனர்.
அதன்படி, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 13ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என டான்ஸ்ரீ பாலா விடுத்திருந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வரிசையாகத் தோல்விகளை மட்டுமே நீதிமன்ற அணுகுமுறை சந்தித்து வருவதால், இனியும், நீதிமன்றப் போராட்டம் வேண்டாம் என்றும் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதற்கு பதிலாக, இரண்டு தரப்புகளும் இணைந்து பேசி, அரசியல் ரீதியான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
கூட்டத்தின் முக்கிய முடிவு # 2 – பிரதமரைச் சந்திக்க வேண்டும்
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு பிரதமரைச் சந்தித்து தங்களின் தரப்பு நியாயத்தையும், வாதத்தையும் எடுத்துக்கூற வேண்டும் என்பதும், கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்க வேண்டும் – சில தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்பதுமாகும்.
கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்வு என்னவென்றால், 2012ஆம் ஆண்டு வரை சங்கப் பதிவகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட எல்லாக் கிளைகளின் வேட்புமனுக்களையும் ஏற்றுக் கொள்வதாகும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட – பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இனி கட்சியில் யாரும் இடைநீக்கம் இல்லை, யாரும் தங்களின் உறுப்பியத்தை இழக்கவில்லை என்ற முடிவுகளை எடுத்து, அனைத்து தலைவர்களையும் மீண்டும் கட்சிக்குள் இணைத்து, ஜனநாயக முறைப்படியான மறுதேர்தலை நடத்த வேண்டும் என்றும் –
வென்றவர்கள் தோல்வியடைந்தவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் –
தோல்வியடைந்தவர்கள் இனியும் பிரச்சனை செய்யாமல், வென்றவர்களுக்கு தங்களின் முழுமையான-நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் தீர்வை பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன் மொழிந்துள்ளனர்.
டாக்டர் சுப்ரமணியம், டத்தோ சரவணன் உள்ளிட்ட 2009 மத்திய செயலவையினர் 15 பேரைத் தாங்கள் கட்சியிலிருந்து ஓர் ஆண்டுக்கு இடைநீக்கம் செய்திருப்பதாக, இன்னும் நான்தான் மஇகா தேசியத் தலைவர் எனக் கூறிக் கொள்ளும் பழனிவேல் அறிவித்திருக்கின்றார்.
அதே வேளையில், மஇகா அமைப்புவிதி 91இன்படி நீதிமன்றத்திற்கு மஇகா விவகாரத்தைக் கொண்டு சென்ற காரணத்தால், பழனிவேல்,சோதிநாதன், பாலகிருஷ்ணன், கே.இராமலிங்கம், பிரகாஷ் ராவ் ஆகியோர் கட்சியில் தங்களின் உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டனர் என்றும் 2009 மத்திய செயலவை அர்த்தப்படுத்தி, அந்த முடிவை சங்கப் பதிவகமும் ஏற்றுக் கொண்டு, டாக்டர் சுப்ராவை இடைக்காலத் தேசியத்தலைவராக அறிவித்துவிட்டது.
காலம் கடந்த தீர்வா?
இந்தக் காரணங்களால் சனிக்கிழமை நடைபெற்ற பழனிவேல் ஆதரவாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் காலம் கடந்த முடிவுகளாகத் தென்படுகின்றன என்றும், எந்த அளவுக்கு அவை செயல் வடிவம் காண முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காரணம், டாக்டர் சுப்ரா தரப்பில் ஆரம்பம் முதலே இந்தத் தீர்வுதான் முன்மொழியப்பட்டு வந்தது. ஆனால் பழனிவேல் தரப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
சுப்ரா இடைக்காலத் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டு, கட்சி அவரது தலைமைத்துவத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் தற்போதுள்ள சூழ்நிலையில், பிரதமர் நஜிப் முன்னுரிமை கொடுத்து பழனிவேல் தரப்பினரைச் சந்திப்பாரா என்பது கேள்விக் குறிதான்.
அதே வேளையில், சட்ட ரீதியான அம்சங்களால், பழனிவேல் உள்ளிட்ட ஐவர் தங்களின் உறுப்பியத்தை இழந்து நிற்கும் நிலையில் – நீதிமன்ற வழக்கிலும் தோல்வியடைந்துவிட்ட நிலையில் – அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு ஜனநாயகத் தேர்தலைச் சந்திக்க சுப்ரா தரப்பினர் ஒப்புக் கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான்!
நோன்புப் பெருநாள் விடுமுறைகள் முடிந்து விட்ட நிலையில் எந்த நேரத்திலும், அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்ற ஆரூடங்கள் பரவிவரும் சூழ்நிலையில் – அப்படி நிகழப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் பழனிவேல் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்ற பரபரப்பும் மஇகா வட்டாரங்களில் நிலவி வருகின்றது.
மஇகா கிளைகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய மறுவாய்ப்பு
இதற்கிடையில், ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட கிளைகள் தங்களின் வேட்புமனுத் தாக்கலை வெற்றிகரமாக முடித்துள்ளதாலும், கட்சியின் பெரும்பான்மை கிளைகள் தங்கள் பக்கம் நிற்பதாலும், இனியும் சுப்ரா தரப்பினர் இதுபோன்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்களா என்ற ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல்களில் சில நியாயமான காரணங்களால் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத கிளைகளுக்கு மறுவாய்ப்பு வழங்கவும் சுப்ரா தரப்பு முடிவு செய்து அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்ற வாய்ப்பையும் வழங்கியிருந்தது. அந்த வாய்ப்பின்படி மேல் முறையீடு செய்வதற்கான இறுதிநாள் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் நீட்டிக்கப்படுமா என்ற அறிவிப்பும் இதுவரை இல்லை.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல கிளைகள் மேல் முறையீடு செய்திருப்பதாகவும் மஇகா தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் சனிக்கிழமை நடைபெற்ற பழனிவேல் ஆதரவாளர் கூட்டத்தில் வேட்புமனுத் தாக்கல்களைச் சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் கோர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளும் முன்மொழியப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
-இரா.முத்தரசன்