சென்னை, ஜூலை 20- முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்துக் கேள்வி எழுப்புவர்களுக்கு நாகரிகமான முறையில் பதில் அளிக்க வேண்டியது கடமை எனப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாஜக சார்பில் நேற்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. இதில் பங்கேற்க, தமிழகப் பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் உடல்நிலை:
“தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்துப் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அதே சமயம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்துக் கேள்வி எழுப்புவர்களுக்கு நாகரிகமான முறையில் பதில் அளிக்க வேண்டியதும் கடமை என்றார்.
அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்துத் தெளிவான அறிக்கை வேண்டும்:
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. மின்சார வாரியத்தில், குறைந்த அளவுக்கு இருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் தள்ளிவிட்டு அதிக மதிப்பில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு உடனடியாகத் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
உணவுப் பொருள் பரிசோதனைக் கூடங்கள்:
கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறி, மருந்து மற்றும் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாகக் கேரள அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் தமிழக அரசு பரிசோதனை செய்து, சுகாதாரம் குறித்த அறிக்கையை வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.
எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் பரிசோதனைக் கூடங்களைத் தமிழகத்தில் அமைக்க வேண்டும். அத்துடன் அந்தப் பொருட்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்க வேண்டும்”
மேற்கண்டவாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.