Home நாடு பலமான கூட்டணியுடன் ‘பக்காத்தான் 2.0’ உருவாகிறது – அன்வார் அறிவிப்பு

பலமான கூட்டணியுடன் ‘பக்காத்தான் 2.0’ உருவாகிறது – அன்வார் அறிவிப்பு

548
0
SHARE
Ad

01anwarbig-20131101145448745497-620x349கோலாலம்பூர், ஜூலை 22 – புதிய கூட்டணியுடன் பக்காத்தான் 2.0 உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் இருந்தபடியே இன்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிக்கை விடுத்திருக்கின்றார்.

அன்வார் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பெர்சே போன்ற அரசு சாரா இயக்கங்கள், அபிம், இக்ராம் மற்றும் புதிதாய் உருவாகியுள்ள கெராக்கான் ஹராப்பான் பாரு ஆகியவற்றின் பலமான கூட்டணியுடன் பக்காத்தான் ராக்யாட் 2.0 உருவாகி வருகின்றது.”

#TamilSchoolmychoice

“நம்முடைய நாடு பிரச்சனைகளால் மிகவும் மோசமடைந்து வருகின்றதோடு, தேசிய முன்னணி அரசாங்கம் மறுக்கப்பட்டு வருகின்றது.” என்று தெரிவித்துள்ள அன்வார், வரலாற்றில் இல்லாத அளவில் மலேசிய ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சியையும், பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அரசாங்கத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், “இந்த இக்கட்டான நேரத்தில், மலேசியர்கள் ஒன்று கூடி, ஒற்றுமையாக நம்முடைய தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய கூட்டணி, மறுமலர்ச்சியையும், மாற்றங்களையும் உருவாக்கும் நோக்கத்துடன் தயாராகி வருகின்றது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பக்காத்தான் கூட்டணியில் இருந்த பாஸ் கட்சி, சக கூட்டணிக் கட்சியான ஜசெகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்த பிறகு, ஜசெக பக்காத்தானில் இருந்து விலகி தனிக்கட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாஸ் கட்சித் தேர்தலுக்குப் பிறகு, அக்கட்சியில் இருந்து விலகிய முகமட் சாபு, காலிட் சமட் போன்ற சில முக்கியத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கடந்த வாரம் கெராக்கான் ஹராப்பான் பாரு என்ற புதிய கட்சியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.