சென்னை, ஜூலை 26 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கார்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்க இருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பினை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த மே 11-ம் தேதி வழங்கினார். அந்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் நிரபராதிகள். ஆகவே, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுவதாகக் கூறி தீர்ப்பளித்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பில், கணக்குப்பிழை இருப்பதாகவும், பிழைகளை சரியாக கவனிக்காததால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதாகவும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ஆர்ச்சார்யா உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டினர். மேலும், இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் கர்நாடக அரசை வலியுறுத்தினர். இதனை ஏற்ற கர்நாடக அரசு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு செய்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 2 மனுக்களையும் ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வில், வரும் 27-ம் தேதி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தது. அதன்படி, விசாரணை நாளை தொடங்க இருக்கிறது. இந்த விசாரணையின் போது, கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.