புத்ராஜெயா, ஜூலை 26 – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சிறப்பு நடவடிக்கைக் குழு, மேலும் ஒருவரை கைது செய்துள்ளது. விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்நபர், இந்த விவகாரம் தொடர்பில் கைதான நான்காவது நபர் ஆவார்.
48 வயதான அந்த நிர்வாக இயக்குநரை சனிக்கிழமை காலை 10.15 மணிக்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது அந்த நபரை 7 நாள் தங்களின் காவலில் வைத்திருக்க அனுமதி அளிக்குமாறு ஊழல் தடுப்பு ஆணையத் தரப்பு கோரியது. எனினும் மாஜிஸ்திரேட் நிக் இஸ்ஃபாஹனி டஸ்னிம் 4 நாள் காவலுக்கு மட்டுமே அனுமதி அளித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வைத்து அந்த நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தொடர்பில் சிறப்பு நடவடிக்கை குழு நடத்தி வரும் விசாரணைக்கு உதவும் பொருட்டே அந்த இயக்குநர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவியல் சட்டப் பிரிவு 17 (எ) என்பதன் கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.