கோலாலம்பூர், ஜூலை 28 – இன்று காலை மாமன்னரைச் சந்தித்து புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் நஜிப் துன் ரசாக் வழங்கினார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தனது புதிய அதிகாரபூர்வ அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டார்.
இன்று காலை தனது நெருங்கிய ஆதரவாளர்கள் சிலருக்கு அனுப்பிய செல்பேசி குறுஞ்செய்தியில் தான் பிரதமரால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தகவலை பழனிவேல் உறுதிப்படுத்தியிருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி அவருக்குப் பதிலாக மஇகா சார்பில் இரண்டாவது அமைச்சர் யாரும் நியமிக்கப்படாதது, மஇகா வட்டாரத்திலும், இந்திய சமுதாயத்திலும் பரவலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மஇகா தேசிய நிலையிலான தேர்தல்கள் தொடங்கியிருப்பதால், தேர்தல்கள் நடைபெற்று முடியும்வரை இரண்டாவது அமைச்சர் நியமனத்தை பிரதமர் ஒத்தி வைத்திருப்பதாக அம்னோ மற்றும் தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஇகா தேர்தல்கள் முறையாக நடந்து முடிந்து தேசியத் துணைத் தலைவராக யார் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ அவரே மஇகாவின் சார்பில் இரண்டாவது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் சில மஇகா வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.