சென்னை, ஆகஸ்டு 3- சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட தமிழகத்திலுள்ள முக்கியமான 352 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனி அறையை முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.
பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் குழந்தைகள் பசியில் அழும் போது, தாய்மார்கள் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்ட சங்கடப்படுகிறார்கள். ஆகையால், எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாகக் குழந்தைக்குப் பாலூட்டும் வகையில் பேருந்து நிலையங்களில் தனி அறைகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3.7.2015 அன்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, சகல வசதிகளுடன் கூடிய தனி அறைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று முடிந்தது. ஆகஸ்டு 1-ஆம் தேதி அதற்கான திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அச்சமயத்தில் எதிர்பாராமல் அப்துல் கலாம் மறைந்து விட்டதால், குறிப்பிட்ட தேதியில் திறக்க இயலவில்லை.
அதன் காரணமாக, இரண்டு நாள் தாமதத்தில் 352 அறைகளை இன்று காணொளி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அதோடு, 7 தாய்ப்பால் வங்கிகளையும் இன்று காணொளி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஏற்கனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுபோல் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தேனி, சேலம், தஞ்சாவூர் மற்றும் எழும்பூர் ஆகிய 7அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏழு தாய்ப்பால் வங்கிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.