புதுடில்லி, ஆகஸ்ட் 10- டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் நோயாளி உயிரிழந்தார். நேரடிஒளிபரப்பு என்பதால் இதை நேரடியாகப் பார்த்தவர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தார்கள்.
கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த டில்லியைச் சேர்ந்த ஷோபா ராம் என்பவருக்கு, ஜப்பானில் உள்ள புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் தடுப்புமையத்தின் மருத்துவர் கோரோ ஹோண்டா என்பவரின் தலைமையில் இந்திய மருத்துவர்களின் உதவியோடு எய்ம்ஸ் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக் கருத்தரங்கம் ஒன்றிற்காக இந்த அறுவைச் சிகிச்சை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.
இந்த அறுவைச் சிகிச்சையின் போது ஷோபா ராமின் உடலிலிருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நம்பிக்கையோடு மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தோல்வியில் முடிந்து நோயாளி உயிரிழந்ததால் மருத்துவக் குழுவினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
மனிதனின் முயற்சி மற்றும் திறமைக்கு அப்பாற்பட்டு ஒரு காரியம் தோற்கிறதென்றால் அது இறைவனின் செயல் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், மருத்துவர்களின் கவனக் குறைவினாலேயே நோயாளி உயிரிழக்க நேரிட்டதாக அவரது உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.