Home இந்தியா தந்தையை சந்தித்துப் பேசத் துடித்த அழகிரி: கருணாநிதியோ தவிர்த்தார்

தந்தையை சந்தித்துப் பேசத் துடித்த அழகிரி: கருணாநிதியோ தவிர்த்தார்

1108
0
SHARE
Ad

சென்னை, ஜனவரி 5 –  ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என அறிவித்துள்ள திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்திக்க மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெள்ளிக்கிழமை முயற்சித்தார். ஆனால், அவரைச் சந்திக்காமல் கருணாநிதி தவிர்த்துவிட்டார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையே பலத்த போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனக்குப் பிறகு தி.மு.க.வின் தலைவர் யார் என்ற கருணாநிதியின் பேச்சுக்குப் பிறகு மதுரையில் இருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை வந்த மு.க.அழகிரி “திமுக ஒன்றும் மடம் அல்ல’ என்று கூறினார். இந்த வசனம் ஏற்கனவே கருணாநிதி கூறிய வசனம்தான். உங்களுக்குப் பின் ஸ்டாலின்தான் தலைவரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போதெல்லாம், தி.மு.க ஒன்றும் மடாலயம் அல்ல என்று பதில் சொன்னவர் கருணாநிதி.

#TamilSchoolmychoice

சிக்காத கருணாநிதி:

சென்னை வந்த அழகிரி, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குச் செல்லத் திட்டமிட்டார்.

இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாராம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு அறிவாலயத்துக்குச் சென்று சிஐடி நகர் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதற்குப் பிறகு மாலையில் கோபாலபுரம் வீட்டுக்கு அழகிரி நேரடியாகச் சென்றுள்ளார்.

ஆனால், கருணாநிதி, அதற்கு முன்னே புறப்பட்டு அண்ணாநகரில் உள்ள பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அன்பழகனோடு பேசிக் கொண்டிருந்து விட்டு சிஐடி நகர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

கோபாலபுரம் வீட்டில் தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, மு.க.அழகிரி மட்டும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அழகிரி தன் ஆதங்கத்தை தயாளு அம்மாளிடம் தெரிவித்துவிட்டுச் சென்றாராம்.

உள்கட்சித் தேர்தல் தாமதம்:

உள்கட்சித் தேர்தல் திமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 14-வது உள்கட்சித் தலைவர் நடத்துவதற்கான உறுப்பினர் சேர்க்கைகள் முடிந்து உறுப்பினர் அட்டைகளும் பல மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உள்கட்சித் தேர்தல் முதலில் ஆரம்பித்த வேகத்தில் நடந்திருந்தால் 6 கட்டமாக நடைபெறும் தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிவடைந்து வரும் ஜூன் மாதம் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஆனால், இந்த ஆண்டு உள்கட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் திமுக தலைமைக்கு இல்லை. மக்களவைத் தேர்தல் விரைவில் வந்துவிடும் என்று ஒரு காரணம் சொன்னாலும், தலைவர் பதவிக்கான போட்டியால் தேர்தல் தள்ளிப் போகிறது என்று சொல்லப்படுகிறது.