பிலிப்பைன்ஸ்,ஜன.05 – பிலிப்பைன்ஸில் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபரை பிலிப்பைன்ஸ் போலிசார் மீட்டனர். இந்திய தொழிலதிபர் குர்தேஜ் சிங் மற்றும் அவரது மனைவி குல்வீந்தர் கவுர் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடத்தப்பட்டனர். இருவரையும் விடுவிக்க ரூ.4 லட்சத்து 900 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் தர வேண்டும் என கடத்தல்காரர்கள் நிபந்தை விடுத்தனர். பின்னர் இந்த தொகையை 24 ஆயிரத்து 500 டாலர்களாக குறைத்துக் கொண்டார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தார், 6 ஆயிரத்து 800 டாலர்களை அளித்ததையடுத்து குல்வீந்தர் கவுர் மட்டும் விடுவிக்கப்பட்டார். மீதி தொகை கிடைக்காததால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், குர்தேஜ் சிங்கின் விரலை துண்டித்து அவரது வீட்டுக்கு பார்சலாக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வடக்கு புலாகான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்த பிலிப்பைன்ஸ் போலீசார், கடத்தல்காரர்களுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு நேற்று குர்தேஜ் சிங்கை மீட்டனர். இந்த சண்டையில் 4 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.