சென்னை – திமுக-வில் முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டது தான் தாமதம், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பச் சண்டை மீண்டும் தெருவிற்கு வந்து விட்டது. 2016 தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும் என அழகிரி பரபரப்புப் பேட்டி அளிக்க, அவர் ஏதோ விரக்தியில் பேசுகிறார் என ஸ்டாலின் பதிலுக்கு கொந்தளிக்க, இடையில் கருணாநிதி தான் சிக்கித் தவிக்கிறார்.
இந்நிலையில், இது பற்றி கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதத்தில் பத்திரிக்கையாளர்கள் ஏன் ஸ்டாலினை வேதனைப்பட வைக்கிறீர்கள்? என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அவர், “அ.தி.மு.க. விலே ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பேர் ஆதரவு? ஓ.பன்னீர் செல்வத்திற்கு எத்தனை பேர் ஆதரவு? என்றா கேட்டிருக்கிறார்கள். தி.மு.கழகத்தில் மட்டும் இரண்டு பேரைக் குறிப்பிட்டு எதற்காக கணக்கெடுக்க வேண்டும். கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் கருத்து கணிப்பு எடுத்து வெளியிட்டவர்களின் நோக்கமா? அதுவும் தேர்தல் நெருங்கு வதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த எதற்காக முனைகிறார்கள்? முதல்வர் வேட்பாளர் பற்றி நாங்களே கவலைபடாத போது கருத்துக் கணிப்பு எடுக்கின்றவர்களுக்கு ஏன் அக்கறை? அதனால் ஸ்டாலினுக்குத் தான் எப்படிப்பட்ட தர்ம சங்கடம்? அவர் கழகமே என் மூச்சு என்று அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை ஏன் இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறார்கள்?” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் குறித்து அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி திமுக தலைவர் கூறுகையில், “அழகிரி பேட்டிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து சில ஏடுகள் வெளியிடுகின்றன என்றால், அவர் மீது உள்ள அக்கறை காரணமாகவா? அவரும் தன் தம்பி மீதுள்ள சொந்த கோபத்தின் காரணமாக, என்னைப் புகழ்ந்து கூற, அதனால் என்ன பயன்? எதிர்ப்பாளர்களுக்கு இடம் கொடுத்து விடுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.