சென்னை – இலங்கையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குத் தேமுதிக தலைவரும் தமிழகச் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை
“கடந்த மாதம் இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுப் பிரதான எதிர்க்கட்சியாக 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவராக இலங்கைத் தமிழரான இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி கேட்டு, தமிழக எதிர்க்கட்சித்தலைவரான நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
இலங்கையின் ஒரு சிறந்த எதிர்கட்சித்தலைவராக இரா.சம்பந்தன் சிறப்பாக செயல்பட்டு போரினால் பாதிக்கப்பட்டுத் தங்கள் மறுவாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும், இலங்கைத் தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன். அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இலங்கை மண்ணில் ஒரு தமிழர் தனது அயராத போராட்டத்தால் 32 ஆண்டுகள் கழித்து உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதற்கு முக்கியத் தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் முறைப்படி ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காத நிலையில், விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருப்பது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும்.