சென்னை : தமிழ்நாடு தலைநகர் சென்னையின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் போற்றப்பட்ட நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான விஜயகாந்த்தின் நல்லுடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு இன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் இறுதிச் சடங்குகளில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், தமிழ் நாடு அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பாக்கியராஜ், குஷ்பூ, பார்த்திபன், சுந்தர் சி, சத்யராஜ், விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் விஜயகாந்துக்கு நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
72 மரியாதை குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) அதிகாலை 6 மணிக்கு விஜயகாந்த் நல்லுடல் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகலில் அங்கிருந்து விஜயகாந்த் நல்லுடல் ஊர்வலமாக தேமுதிக தலைமையகம் கொண்டு செல்லப்பட்டது. சாலைகளின் இருபுறமும் பொதும்க்கள் மலர் தூவியும், திரண்டு வந்தும் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.