சென்னை – ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்ற சுற்றுலா மலைப்பிரதேசங்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடந்து வருவதாகச் சட்ட சபைக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஓமலுார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், “ ஏற்காடு மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேலே செல்ல கம்பி வட ஊர்தி( ரோப் கார்) வசதி அமைக்கப்படுமா?” எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், “ஏற்காடு மட்டுமல்லாமல் ஊட்டி, கொடைக்கானல், கொல்லி மலை, ஏலகிரி போன்ற மலைப்பகுதிச் சுற்றுலா மையங்களுக்குக் கீழிலிருந்து மேலே செல்லும் வகையில் கம்பி வட ஊர்தி (ரோப்கார்) அமைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்புச் சேவை நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பிரதேசச் சுற்றுலா மையங்களுக்குக் கம்பி வட ஊர்தி வசதி செய்யப்படுமென்றும் இதுதொடர்பாகத் தனியார் நிறுவனமான பவன்ஹன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கடந்த 2006 அக்டோபர் மாதமே அன்றைய சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்திருந்தார்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் அத்திட்டம் ஆய்விலேயே இருக்கிறது எனபது தான் ஆச்சரியமான விசயம்.