Home Featured தமிழ் நாடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்! 8 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்! 8 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா!

766
0
SHARE
Ad

vijayakanth00சென்னை – நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாட்டின் தாக்கம் முடிவடைவதற்கு முன்பே, அந்தக் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்துள்ளார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, 41 இடங்களில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, 24 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்து திமுகவைப் பின்தள்ளி, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் அ.தி.மு.க – தே.மு.தி.க. உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். இவர்கள் சட்டசபையில் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டு வந்தனர்.

#TamilSchoolmychoice

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவேண்டிய நிலையில், தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில் தே.மு.தி.க. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், சாந்தி, மைக்கேல் ராயப்பன், தமிழழகன், மா. பாண்டியராஜன், அருண் சுப்பிரமணியம், சுரேஷ் குமார் ஆகிய 8 பேரும் சபாநாயகர் தனபாலை சந்தித்து தாங்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாக கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பா.ம.க.வைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டனர்.

தே.மு.தி.க.விலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை இழந்துவிட்டதை அடுத்து அந்தக் கட்சிக்கு தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர்.

எனவே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்து விட்டதாக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்து விட்டதால், புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படும் வாய்ப்பும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்து விட்டதால் அந்த பதவிக்கு உண்டான சலுகைகளும் இனி அவருக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.