இலண்டன் – ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரவேண்டும் என வலியுறுத்தி வரும் வேளையில், அந்தக் கட்சியின் அடுத்த தலைவராகவும், ஏன் அடுத்த பிரிட்டிஷ் பிரதமராகவும் கூட வரக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுபவர் இலண்டன் வாசிகளிடையே பிரபலமான இலண்டன் மேயர் (மாநகரசபைத் தலைவர்) போரிஸ் ஜோன்சன் (படம்).
இவர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தில் தன்னையும் தற்போது இணைத்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருப்பது கேமரூனுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவு எனப் பார்க்கப்படுகின்றது.
ஜோன்சனின் முழக்கம் மூலம், கேமரூனின் கட்சியிலேயே உட்போராட்டம் வெடிக்கும் – பிளவுகள் ஏற்படும் என்ற ஆரூடங்கள் உண்மையாகும் என்பது தெளிவாகியுள்ளது.
எப்போதும் சரியாக வாரிவிடப்படாத, கலைந்த தலைமுடியுடன் சாதாரணமாக சைக்கிள்களில் சுற்றித் திரிந்து – அதே வேளையில் இலண்டன் மேயராக இருந்து இலண்டன்வாசிகளின் பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தவர் என்ற முறையில் ஜோன்சன் மக்களிடையே மிகவும் பிரபலமானவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்கின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கான சிறப்பு அந்தஸ்து என்பது போதுமான சீர்திருத்தங்களை உள்ளடக்கியிருக்கவில்லை என ஜோன்சன் கூறியிருக்கின்றார்.
இதன்மூலம், பிரிட்டிஷ் அரசியலில், தற்போது பொதுத் தேர்தலுக்கு இணையான பரபரப்பும், சூடும் பரவத் தொடங்கியுள்ளது.
பிரிட்டிஷ் மக்களிடையே மிகப் பிரபலமான தலைவர்கள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனைப் பிரித்து வைக்குமா என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.