கோலாலம்பூர் – தலைநகரில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெர்சே 4 பேரணியை அடுத்து, சாலைகளை சுத்தம் செய்வதற்கு செலவான 65,000 ரிங்கிட் தொகைக்கான அறிக்கையை (பில்), ஒருவழியாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) பெர்சே தலைவர் மரியா சின்னிடம் நேற்று வழங்கியது.
கடந்த வாரம், அந்த அறிக்கை தவறான முகவரிக்கு அரசாங்கத்தால் அனுப்பப்பட்டதால், நேற்று முன்தினம் பெர்சே அலுவலகம் முன்பு பெரிய அளவில் சின்னங்களும், பதாகைகளும் அடையாளத்திற்காக வைக்கப்பட்டன.
இந்நிலையில், நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பெர்சே அந்த 65,000 ரிங்கிட் தொகையை செலுத்த மறுத்தால், பெர்சே அலுவலகத்தின் முன்பு குப்பைகளைக் கொட்டுவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், அறிக்கையைப் பெற்றுக் கொண்ட மரியா சின், “கோலாலம்பூர் வீதிகளைச் சுத்தப்படுத்த நாங்கள் உதவிய போதும் கூட, எங்களுக்கு கட்டண அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.