Home Featured நாடு உள்விவகாரத்தில் தலையிட்டதாக சீனத் தூதர், மலேசிய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்படலாம்!

உள்விவகாரத்தில் தலையிட்டதாக சீனத் தூதர், மலேசிய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்படலாம்!

536
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெட்டாலிங் ஸ்ட்ரீட் விவகாரம் மெல்ல மெல்ல அனைத்துலக விவகாரமாக உருவெடுத்து வருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை இந்தப் பகுதிக்கு திட்டமிடப்படாத வருகை ஒன்றை மலேசியாவுக்கான சீனத் தூதர் மேற்கொண்டு, அங்குள்ள வணிகர்களுக்கு மூன்கேக் எனப்படும் சீனப் பெருநாள் பலகாரத்தை வழங்கினார்.

Chinese Ambassaor-Huang Huikang-வெள்ளிக்கிழமையன்று பெட்டாலிங் ஸ்ட்ரீட் வருகையின் போது சீனத் தூதர் தனது மனைவியுடன்

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது அவர் வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதாக அவர் மலேசிய வெளியுறத்துறை அமைச்சுக்கு அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

சீன அரசாங்கம், இனங்களுக்கு எதிரான போக்குகளுக்கு எதிரான கொள்கையைக் கொண்டது என்றும், எந்த வகையான தீவிரவாதத்தையும் எதிர்க்கின்றது என்றும் சீனத் தூதர் டாக்டர் ஹூவாங் ஹூய்காங் கூறியிருந்தார்.

இதன் தொடர்பில் இன்று கருத்துரைத்த விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சு அமைந்துள்ள கட்டிடம்) அதிகாரிகள் அநேகமாக திங்கட்கிழமை சீனத் தூதர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்படலாம் என கோடி காட்டியுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு எதிராக – அவர்கள் மேற்கொள்ளும் வணிகங்களுக்கு எதிராக – கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தை தனது நாடு கண்டிக்க தயங்காமல் குரல் கொடுக்கும் என்றும் சீனத் தூதர் கூறியிருந்தார்.

பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட சிவப்புப் பேரணி, அதைத் தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் ஆகியவை தொடர்பில் சீனத் தூதர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால், இது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது என்ற காரணத்தால் சீனத் தூதர்  வெளியுறவு அமைச்சால் அழைக்கப்படுகின்றார் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.