கோலாலம்பூர் – மலேசிய உள்விவகாரங்களில் தான் தலையிட எண்ணவில்லை என மலேசியாவிற்கான சீனத் தூதர் டாக்டர் ஹுவாங் ஹுய்காங் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று சீனப் பத்திரிக்கைகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், பெட்டாலிங் ஸ்ட்ரீட்டை தான் பார்வையிட்டு கருத்துக் கூறிவ விவகாரத்தில் தனக்கு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ ‘அறிக்கையோ’ அல்லது ‘அழைப்போ’ விஸ்மா புத்ராவிடமிருந்து வரவில்லை என்றும், சில பத்திரிக்கைகளில் கூறப்பட்டிருக்கும் தகவல் முரணானது என்றும் ஹூவாங் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய அறிக்கைகள் பலமாதிரியாகத் திரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனை தூதரகப் பிரச்சனையாகவும், மலேசிய அமைச்சர்களிடையே விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவும், மலேசியாவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களாக இருக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்று நம்புகிறேன்.”
கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஸ்ட்ரீட்டைப் பார்வையிட்ட பின்பு தான் கூறிய கருத்துக்களை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவும் ஹூவாங் தெரிவித்துள்ளார்.