சான் ஜோசே – நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு சபை கூட்டங்களில் கலந்து கொண்டு – பல முக்கிய உலகத் தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்திய பின்னர் இந்தியப் பிரதமர் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ் நகர் வந்தடைந்தார்.
அவருக்கு ஒரு சினிமா சூப்பர் ஸ்டார் பாணியில் வரவேற்பு நல்கப்பட்டுள்ளது. சான் ஜோசே விமான நிலையம் வந்தடைந்த அவரை இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகளும் இந்திய வம்சாவளி பிரமுகர்களும் திரண்டு வந்து வரவேற்பு நல்கினர்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகர்-நடிகர்கள், இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் வருகை தரும்போதுதான் விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பார்கள்.
அரசியல் தலைவர்கள் என்றால் ஒரு சிறிய ஆதரவாளர் கூட்டம் மட்டும் காத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில், மோடிக்கோ செல்லும் இடமெல்லாம் விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்கின்றார்கள்.
அவர் செல்கின்ற வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் அவரைக் காண காத்திருக்கின்றனர்.
சான் ஜோசே விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர்
டிம் குக் சந்திப்பு
உலகின் மிகப் பெரிய தொழில் நுட்ப நிறுவனமான, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குடன் மோடி சனிக்கிழமையன்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
மோடியுடனான தனது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிம் குக், சிறந்த பலன்களைத் தரக்கூடிய விதத்தில் தங்களின் சந்திப்பு நடந்ததாகவும், இந்தியா ஏராளமான வணிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் நாடு என்றும் தெரிவித்துள்ளார்.
மோடியைச் சந்தித்து விட்டு வெளியேறியபோது, பத்திரிக்கையாளர்கள் டிம் குக்கைச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டபோது, “it is terrific! It is fantastic” – (பிரமாதமாக இருந்தது – அபாரமாக இருந்தது என்ற பொருளில்) என்றார் அவர்.
சான் ஜோசே விமான நிலையத்தில் தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் மோடி…
டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலை வருகை
அமெரிக்காவில் மின்சாரக் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் டெஸ்லா கார் தொழிற்சாலைக்கும் வருகை ஒன்றை மேற்கொண்ட மோடி, அந்த தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்தார்.
டிஜிட்டல் இந்தியா – உச்ச மாநாடு
ஞாயிற்றுக்கிழமை காலை டிஜிட்டல் இந்தியா (இலக்கவியல்) என்ற தலைப்பிலான மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாடெல்லா ஆகியோர் முன்னிலையில் ஒரே மேடையில் உரையாற்றினார் மோடி.
பேஸ் புக் கேள்வி பதில் அரங்கம்
நேற்று மாலை பேஸ் புக் தலைமையகம் சென்ற மோடி அங்கு அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் கேள்வி பதில் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
அவரது இந்த நிகழ்ச்சி பேஸ் புக் பக்கங்களில் நேரலையாக பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த கேள்வி பதில் கலந்துரையாடலின்போது, தனது தாயைப் பற்றி ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது மோடி தொண்டை அடைத்துக் கொள்ள, நா தழுதழுக்க, கண்கலங்கினார்.
ரோக் ஸ்டார் பாணியில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரை
ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கலிபோர்னியா வருகையின் இறுதிக் கட்டமாக, அமெரிக்க நாடாளுமன்ற, செனட் சபை உறுப்பினர்கள் முன்னிலையில், சுமார் 18,000 பேர் பணம் கட்டி கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் மோடி.
அப்போது அவருக்கு ஒரு ‘ரோக் ஸ்டார்’ பாணி’யில் கூக்குரல்களோடு, ஆரவாரமிக்க வரவேற்பு நல்கப்பட்டது.
தனது கலிபோர்னியா வருகையை முடித்துக் கொண்டு மோடி இன்று வாஷிங்டன் செல்வார் என்றும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சந்திப்பு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.