புதுடில்லி – தீவிரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக, புனேவிலுள்ள ராணுவ மையத்தில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து 14 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கிறது.
இதுகுறித்து இந்திய ராணுவத் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
‘‘மித்ர சக்தி பயிற்சித் திட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சி புனேவிலுள்ள அவுந்த் ராணுவ முகாமில் 29-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
ஐநா சபையின் உறுப்பு நாடுகளுக்கான கடமை என்ற அடிப்படையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தக் கூட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ராணுவப் பயிற்சியின் இறுதிக் கட்டமாக அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு தரப்பு மூத்த ராணுவப் பார்வையாளர்கள் பங்கேற்று பயிற்சி வகுப்பு நடத்த உள்ளனர்.