கொழும்பு – இலங்கையில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு இதுவரையில் 91 பேர் மரணமடைந்திருக்கின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, மீட்புப் படகுகளும், ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் அந்நாட்டுக்கு உதவுவதற்காக வங்காள விரிகுடாவில் முகாமிட்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இலங்கை நோக்கி விரைந்துள்ளன.
கேரளாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டிருக்கின்றது. இன்று இரவுக்குள் கொழும்பு துறைமுகத்தை அந்தக் கப்பல் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றொரு கப்பல் விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது.
மீட்புப் பணிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள், தண்ணீர், ஆடைகள் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தக் கப்பல்கள் கொழும்புவுக்கு விரைகின்றன.
தேவை ஏற்பட்டால் இலங்கைக்கு மீட்புப் பணிகளில் உதவிக்கு இறங்க இந்தியக் கடற்படை தயார் நிலையில் இருக்கின்றது.