மென்லோ பார்க் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேஸ்புக் கேள்வி பதில் அரங்கத்தின்போது தனது பெற்றோருடன் கலந்து கொண்டார் மார்க் சக்கர்பெர்க். தனது பெற்றோர்கள் வந்திருப்பதாக சக்கர்பெர்க் கூறியவுடன் அவர்களை எழுந்திருக்கச் சொல்லுங்கள் நானும் பார்க்க வேண்டும் என்றார் மோடி.
சக்கர்பெர்க்கின் பெற்றோர்கள் சிரித்துக் கொண்டே எழுந்து நிற்க, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார் மோடி.
அதன் பின்னர் தானே ஒரு கேள்வி கேட்கப் போவதாகக் கூறிய சக்கர்பெர்க், “நமது இருவரின் வாழ்வில் குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். எனது பெற்றோர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள். உங்களின் தாயைப் பற்றிக் கூறுங்கள்” என்று மோடியிடம் கேட்டார்.
தனது தாயைப் பற்றி மோடி கூறிக் கொண்டிருக்கும்போது, தன்னை வளர்க்க அவர்பட்ட சிரமங்களை விவரித்த மோடி அப்போது தொண்டை அடைத்துக் கொள்ள கண்கலங்கினார். ஒரு கட்டத்தில் அவர் மேலும் பேச முடியாத அளவுக்கு அவரது தொண்டை அடைத்துக் கொண்டது.
கேள்வி பதில் அரங்கத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் அமைதியாக, அப்போது மோடி கண்கலங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது பதில்களைத் தொடர்ந்தார் மோடி.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் சில நிமிடங்களில் கேள்வி பதில் அரங்கம் முடிவுக்கு வருவதாக மார்க் சக்கர்பெர்க் அறிவித்தார்.
கேள்வி பதில் அரங்கத்தை நிறைவு செய்தபோது மோடி சக்கர்பெர்க்கை கட்டியணைத்துக் கொண்டார்.
அதன் பின்னர், பேஸ் புக் அலுவலகம் சென்ற மோடி அங்கு வெள்ளை நிறத்தாலான அறிவிப்புப் பலகையில் தனது வாசகங்களை இந்தியில் எழுதி பதிவு செய்தார்.