Home Featured உலகம் தமிழ் முன்னோர்கள் ‘செவ்வாய்’ எனப் பெயரிட்டதில் உள்ள அறிவியல் உண்மை!

தமிழ் முன்னோர்கள் ‘செவ்வாய்’ எனப் பெயரிட்டதில் உள்ள அறிவியல் உண்மை!

946
0
SHARE
Ad

Marsகோலாலம்பூர் – செவ்வாய் கோளில் நீர் இருப்பது நாசாவால் நேற்று திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மேலும் அதிகரித்துள்ளன. மனிதனின் அறிவார்ந்த தேடலுக்கு கிடைத்த இன்னோரு மாபெரும் வெற்றி. நம் வாழ் நாளில் இத்தகைய ஆய்வு நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நம் தமிழ் முன்னோர்கள் செவ்வாய் என பெயரிட்டதில் அறிவியல் உண்மை இருந்தது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒட்சைட்டு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.

பெயரிலேயே தனக்குள்ள விளக்கத்தைத் தெளிவாகக் காட்டி நிற்பது செவ்வாய். சிவந்த நிறத்தில் விளங்குவதால் இதற்குச் செவ்வாய் என்று தமிழ் வானியலாளர் பெயர் கொடுத்தனர். இதனை மற்ற கோள்களை விடவும் மிக எளிதாக வெறுங்கண்ணால் பார்க்கலாம். செவ்வாய்க்கு மிகப்பல பெயர்கள் சிவப்பு நிறம் பற்றியே அமைந்துள்ளன. அவற்றை இனிக் காண்போம்.

#TamilSchoolmychoice

மகுரம் என்பது மங்கிய சிவப்பு நிறம். மகுளி என்பது செடிகள் நீரில்லாமல் வாடியுறும் செந்நிறம். இச்சொற்களின் அடிச்சொல் ‘மகு என்பதாகும். அதனோடு உரம் மற்றும் உளி என்னும் சொல்லீறுகள் சேர்ந்து மகுரம் மற்றும் மகுளி எனுஞ் சொற்கள் பிறந்துள்ளன.

எனவே, செந்நிறக் கருத்துத் தொடர்பான மகு என்னும் அடிச்சொல்லானது; மகு > மங்கு என்று விரித்தல்திரிபு பெற்ற நிலையில், மங்கு + அலன் > மங்கலன் என்று மற்றொரு பெயரையும் பெற்றுள்ளது.

செய்யோன் அல்லது செய்யவன் என்னும் பெயர்களும் சிவப்புநிறம் பற்றியவையே. செய் என்பதே முதல் நீண்டு சேய் என்ற வடிவிலும் செவ்வாய்க் கோளையே குறித்து நிற்கிறது. இந்தக் கோளுக்குரிய அதிதெய்வமாகச் செந்நிறமேனியனாகிய செவ்வேள் என்னும் முருகனே அமையப்பெற்றுள்ளதையும் இவ்விடத்து நினைக.

அடுத்து, அங்காரன் என்னும் பெயரும் உள்ளது. அதுவும் சிவப்பு நிறம் தொடர்பானதே. அங்கி என்பது நெருப்பு: அக்கி என்பதன் மெலித்தல் திரிபு அங்கி என்று ஆயிற்று.

அகு > அகை என்பது எரிதல்-எரித்தல் கருத்தை உணர்த்தும் அடிச்சொற்கள். அகு > அக்கு என விரித்தல்திரிபு பெற்றதன் வழி அக்கு + இ > அக்கி என்ற சொல் வந்துள்ளது. நாவில் சூட்டு மிகுதியால் வரும் பொரிவு அல்லது சிறுகொப்புளம் என்பதும் அதன் கிளைப்பொருளே.

அந்த அக்கு > அங்கு என மெலித்தல்திரிபு பெற்ற வடிவத்திலிருந்து, அங்கு + ஆரன் > அங்காரன் என்னும் எரிநிறமாகிய சிவப்புநிறம் உள்ள செவ்வாய்க்குப் பெயராயிற்று.

அங்காரம் என்பது நெருப்பு. நெருப்பு நிறமாகிய சிவப்பு நிறம் எரிநிறம் எனப்படுவதைக் காண்க. அங்காரன் என்பது அங்காரகன் என்ற வடிவிலும் வழங்குகின்றது.

ஆர் என்பதும் செவ்வாய்க்கு ஒரு பெயராய் உள்ளது. ஆர் + அல் > ஆரல் என்பது நெருப்பு. அதன்வழி ஆரல் எனவும் அழல் எனவும் அழலவன் எனவும் செவ்வாய் குறிக்கப்படுவது தமிழ் மரபு.

செவ்வாய்க்கிழமை என்பதை வடவர் ஏனைய தமிழ்ச்சொற்களைக் கொண்டு அங்காரவாரம், மங்கலவாரம் என்பர். இதனையே தெலுங்கு மற்றும் கன்னட மொழியரும் ஆள்வர்.

கட்டுரை மற்றும் தொகுப்பு: முகிலன் முருகன், ஓம்தமிழ்.

தகவல் நூல்: இர.திருச்செல்வம், தமிழியல் ஆய்வுக் களம், மலேசியா
தமிழ் ஆண்டு – ஓர் அறிவியல் விளக்கம்.