Home Featured நாடு ‘ஆமை’ வேக இணைய சேவைக்கு அமைச்சர் கூறும் காரணம் சரியா?

‘ஆமை’ வேக இணைய சேவைக்கு அமைச்சர் கூறும் காரணம் சரியா?

699
0
SHARE
Ad

SALLEH-SAID-KERUAK-Lகோலாலம்பூர் – “மலேசியாவில் பெரும்பாலான மக்கள் குறைவான வேகம் கொண்ட இணைய சேவைகளை தான் நாடுகின்றனர். அவர்கள் வேகம் அதிகம் கொண்ட இணைய சேவைகளைப் பெற விரும்புவதில்லை” என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சையத் கெருவாக் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வழங்கப்படும் இணைய சேவைகளுக்கும், அண்டை நாடான சிங்கப்பூரில் உள்ள இணைய சேவைகளுக்கும் ஆமை, முயல் வேக வேறுபாடுகள் உள்ளன.

அந்த வேறுபாடுகளை ஜோகூர் வாசிகள் நன்கு உணர்வர். காரணம் தினமும் வேலைக்காக சிங்கப்பூர் சென்று வரும் அவர்கள், சாதாரணமாக அங்கு நூலகம் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் இலவச இணைய சேவை கூட எவ்வளவு வேகமாக உள்ளது என்பதை அறிவார்கள்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், “மலேசியாவில் குறைவான வேகம் கொண்ட இணைய சேவை குறித்து மக்கள் புகார் கூறி வருகிறார்கள். ஆனால் சாலே அதைப் பற்றி கவலைப்பட மறுக்கிறார்” என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறிய கருத்துக்கு சாலே நேற்று இரவு தனது வலைப்பதிவில் பதில் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “மலேசியாவில் 71 சதவிகித இணைப் பயனர்கள் நொடிக்கு 384 கிலோ பைட் வேகம் முதல் 1 மெகா பைட் வேகம் கொண்ட இணையச் சேவையையே விரும்புகிறார்கள்.”

“சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மற்ற நாடுகளில் அதன் வேகம் 4 முதல் 5 மெகாபைட்டுகளாக உள்ளது. மலேசியாவில் 384 கிலோ பைட் வேகம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளில் கிடைக்கும் அளவிற்கு மலேசியாவில் இணையத்தின் வேகத்தை அதிகரித்தால், மலேசியர்கள் அதிக விலை கொடுத்து அந்த சேவையைப் பெற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் என்றும் சாலே குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மலேசியர்கள் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இணையம் சரியாகக் கிடைப்பதிலும், விலையிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் சாலே தெரிவித்துள்ளார்.

அதெல்லாம் சரி, “மலேசியாவில் முக்கிய நகரங்கள் தவிர பல இடங்களில் இணைய சேவையே முழுவதுமாகக் கிடைக்கவில்லையே அது ஏன்?” என்று இணையவாசிகள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“பல இடங்களுக்கு இன்னும் 4ஜி யே வரவில்லை. 3ஜி இணையசேவைக்குக் காசு கொடுத்தவர்கள் கூட 2ஜியை தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்” என்றும் இணையவாசிகள் பல்வேறு இணையதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘சிக்கன் விலை அதிகரித்துவிட்டது ஆனால் கங்கோங் கீரையின் விலை குறைவாகத் தானே உள்ளது‘ என்று மக்களுக்கு அறிவுரை கூறிய அரசாங்கம் தானே இது என்றும் பலர் சாலேவின் கருத்தை படித்துவிட்டுப் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.