Home Featured நாடு சிலாங்கூர் அரச குடும்பத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த பேஸ்புக் பதிவு!

சிலாங்கூர் அரச குடும்பத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த பேஸ்புக் பதிவு!

870
0
SHARE
Ad

கிள்ளான் – கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பேஸ்புக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிலாங்கூர் அரச குடும்பத்தின் செயலாளர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் “ரஹிம் தம்பிசிக்” என்பவரின் பேஸ்புக் பதிவில் சிலாங்கூர் இளவரசர், கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டதாக வதந்தியைப் பரப்பியிருந்தார்.

Selangor royal family

#TamilSchoolmychoice

இதைக் கண்டு பதறிப் போன சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ முகமட் முனிர் பானியும், பட்டத்து இளவரசரின் தனிப்பட்ட செயலாளர் ஹனாபிசா ஜாயிசும் நேற்று மாலை 4 மணியளவில் ஷா ஆலாமில் செக்சன் 6 காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த பேஸ்புக் பதிவில், “சிலாங்கூர் பட்டத்து இளவரசர், தெங்கு அமிர் ஷா கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்ட செய்தி உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும், நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகச் செய்தி மெக்காவிலும், அரபாவிலும் இரண்டு மிகப் பெரிய பேரிடர்களை ஏற்படுத்தியுள்ளது. வேட்டிகன் நகரின் போப் ஆண்டவரை சந்திக்க எண்ணும் சிலாங்கூர் சுல்தானின் கனவும் நனவாகட்டும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிலாங்கூர் பட்டத்து இளவரசர் மற்றும் சிலாங்கூர் அரச குடும்பத்தினர் மீது மக்களுக்கு தவறான எண்ணங்கள் ஏற்படாமல் தவிர்க்க ரஹிம் தம்பிசிக் என்ற அந்த பேஸ்புக் பயனருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச குடும்பம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில் ரஹிம் என்ற அந்த நபர், நம்பகத்தன்மை இல்லாத ஒரு இணையதளத்தில் இருந்து இந்தத் தவறான தகவலை அவர் எடுத்து, அதன் உண்மைத் தன்மை அறியாமல் பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 500-ன் கீழ் அவதூறு மற்றும் தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக சட்டப் பிரிவு 233-ன் கீழ், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றது.

அந்த சர்ச்சைக்குரிய பதிவை தனது பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்ட ரஹிம், தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.