கோலாலம்பூர் – 56 கிராமங்களை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு அங்குள்ள அப்பாவி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் ‘வேதாளங்கள்’. ஒருமுறை மருதீரனின் (விஜய்) காதலி பவளக்கொடியை (ஸ்ருதிஹாசன்) கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். வேதாளங்களை அழிக்க மருதீரன் (விஜய்) எடுக்கும் புதிய அவதாரமும், அதன் மூலம் அவர் தன் தந்தையைப் பற்றியும், பிறப்பு பற்றியும் தெரிந்து கொள்வது தான் சிம்புத்தேவன் இயக்கத்தில் இன்று வெளிவந்திருக்கும் புலி படத்தின் கதை.
ஏற்கனவே அவிங்களுக்கும், இவிங்களுக்கும் வாக்காய் சண்டை! இதுல ‘வேதாளம்னு’ ‘வேதாளம்னு’ படம் பூரா சொல்லியிருக்காங்க. இனி “வேதாளத்தோட விஜய் சண்டை போட்டாரு”, “வேதாளத்தை வென்றது புலின்னு” சொல்லி சொல்லியே பிரச்சனைய ஏற்படுத்தாம இருந்தா சரி..
சரி.. விமர்சனத்துக்கு வருவோம்..
படத்துக்குப் படம் அழகாய்ட்டே போராரு விஜய். இந்தப் படத்துல பிரஷ்சா பிரிஜ்ல இருந்து எடுத்த ஆப்பிள் மாதிரி பளிச்சுனு இருக்காரு. அதேநேரத்துல, தான் நடிக்கும் முதல் வரலாற்றுப் படம் என்பதால் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்.
விஜயின் சண்டைக்காட்சிகளிலும், க்ளோசப் காட்சிகளிலும் திரையரங்கில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. படத்தில் காமெடிக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு தனது உடல்மொழியால் கவர்கிறார் விஜய்.
கரும்புலியோடு, விஜய் புலி மோதும் காட்சியில் இருக்கையில் இருந்து அங்குமிங்கும் பாய்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு அழகாக வந்துள்ளது அந்தக் காட்சி.
“நீ இந்தக் கோட்டைக்குத் தான் தளபதி ஆனா நான்”,
“அரசனா பதவி ஏற்றாலும் நான் என்னைக்குமே உங்களில் ஒருவன் தான்”
“எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்” என அடுத்தக் கட்டத்திற்கு தயாராவது போல் பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறார்.
ஸ்ருதிஹாசன்.. ஆளை மயக்கும் அழகில் பவளக்கொடியாக ரசிகர்களை கிறங்கச் செய்கிறார். ஆனால், வசன உச்சரிப்பிலோ இன்னும் “பேவ்ளக் கொடி” யாகவே இருக்கிறார். கணீர் என்று பாடுவதற்குப் பயன்படும் அவர் குரல், தமிழில் வசனம் பேச ஏனோ அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை. படத்தின் கதைப்படி இரண்டு பாட்டிற்கு ஆட்டம் போட்டுவிட்டு, அதன் பின்பு படுத்த படுக்கையாகி விடுகிறார். படம் முடியும் போது தான் எழுதிருக்கிறார்.
படத்தில் ஹன்சிகாவிற்கும் வசனங்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் மன்னவனே பாடல் காட்சியில் வேதாளமாக அவர் பறந்து வரும் காட்சி அவ்வளவு அழகு.
படத்தில் தாங்கி நிறுத்துவது நகைச்சுவைக் காட்சிகள் தான். தம்பி இராமையா, சத்யன், ரோபோ சங்கர், இமாம் அண்ணாச்சி, வித்யூலேகா ராமன் என ஒரு நகைச்சுவைப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அதுவும் குள்ள மனிதர்கள் காமெடி அசத்தல்.
“தவளைய புதினா சட்டினியா நினைச்சு நக்கிங்க”, “அண்ணே கரடி காரித்துப்பி பார்த்திருக்கேன்.. ஆமை துப்பி இப்ப தான் பார்க்குறேன்” போன்ற வசனங்கள் நம்மை மறந்து சிரிக்க வைக்கின்றன.
பிரபு, சுதீப் போன்றவர்கள் வழக்கம் போல் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு மிரட்டலான கதாப்பாத்திரம் ஸ்ரீதேவி. அப்பப்பா.. கமல்ஹாசனோட கதாநாயகியாக நடித்தவர், இன்று அவரது மகள் ஸ்ருதிஹாசனோடும் நடித்திருக்கிறார். ஆனால் இன்னும் அதே ’16 வயதினிலே’ மிடுக்கு, இளமை, அழகு.
தமிழில் ஸ்ரீதேவி தனது அடுத்த சுற்றை ஆரம்பிக்க இந்தப் படம் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து இதே போன்ற கதாப்பாத்திரங்கள் கிடைக்குமா? என்பது சந்தேகமே.
நடராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. ஒரு ஒளிப்பதிவாளராகவும், அதேநேரத்தில் ஒரு சிறந்த நடிகராகவும் நடராஜன் தன்னை நிரூபித்து வருகின்றார். ‘புலி’ படத்தின் ஒளிப்பதிவில் முழு கவனம் செலுத்தியிருப்பதால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை போலும். கிராபிக்ஸ் காட்சிகளும், படத்தொகுப்பும் ஸ்ரீகர் பிரசாத் கைவண்ணத்தில் சிறப்பாக வந்துள்ளன.
தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளன. “புலி புலி”, “மன்னவனே மன்னவனே”, “ஏன்டி ஏன்டி” ஆகிய பாடல்கள் சட்டென மனதில் நிற்கின்றன.
வேதாளம் என்பதை விஜய் உணரும் காட்சிகளில் நிதானம் இல்லாமல் திடீரென ப்ளாஷ்பேக் செல்வது ரசிகர்களைக் குழப்ப வாய்ப்புள்ளது. “நீ யாரு தெரியுமா?” என்று தொடங்கும் இடத்தில் நேரடியாக வசனத்தின் மூலம் சொல்லிவிட்டு, பின்னர் காட்சிக்குப் போயிருக்கலாம்.
படத்தின் வேகம், சுவாரஸ்யம் எல்லாம் அந்த ப்ளாஷ்பேக் காட்சியில் கொஞ்ச நேரம் காணாமல் போய் பின்னர் கிளைமாக்சில் வந்து சேர்ந்து கொள்கிறது.
நீல நிறத்தில் கண்ணை மாற்ற ஒரு காட்சியில் ஏதோ திரவத்தை தொட்டு கண்ணில் வைக்கும் விஜய், அடுத்து ஒரு காட்சியில் கண்ணில் இருந்து கான்டாக்ட் லென்சை எடுக்கிறார்.
வேதாளங்கள் ஊருக்குள் வந்து அடித்து உதைக்கும் போதே அந்த வைத்தியர் சக்தி நீரைக் குடித்து அவர்களை விரட்டியிருக்கலாமே? அதை விட்டு விஜய் வரும் வரை காத்திருந்து அதை அவரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
வைத்தியர் கொடுத்ததோ ஒரு மூக்குப் பொடி டப்பா அளவிற்கு சக்தி நீர்… அதை எத்தனை வாட்டிய்யா டாப்அப் பண்ணுவீங்க? எங்கிருந்து மீண்டும் மீண்டும் அந்த மூலிகை நீர் கிடைக்குது? போன்ற லாஜிக் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது.
அதே போல், முனிவரால் சபிக்கப்பட்ட பறவை, ஆமை உள்ள காலகட்டத்தில் நடக்கும் கதையில், ‘கேரளப் பெண்களின் ஆடை, தமிழகப் பெண்களின் நளினம்’ என விஜய் வர்ணிப்பதையெல்லாம் கேள்வி கேட்காமல் அமர்ந்து பார்க்க முடிந்தால் படத்தை ரசிக்கலாம்.
என்றாலும், குழந்தைகளும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பொழுதுபோக்கை விரும்பும் ரசிகர்களும் ரசிப்பதற்கான அனைத்து சுவாரஸ்யங்களும் படத்தில் இருப்பதால், புலி – வெற்றிப் புலி என்றே சொல்லலாம்.
அண்மையில் வெளியான பாகுபாலிக்கும், புலிக்கும் அநேக வேறுபாடுகள் உண்டு எனவே, பாகுபாலியை மறந்துவிட்டு இது சிம்புத்தேவன் இயக்கியுள்ள படம் என்ற எண்ணத்தில் போனால் ஏமாற்றம் இருக்காது.
– ஃபீனிக்ஸ்தாசன்