கோலாலம்பூர் -1எம்டிபி விவகாரம் தொடர்பில் தாம் பொய் சொல்லவோ அல்லது எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமோ இல்லை என அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார்.
அண்மையில் 1எம்டிபி இயக்குநர்கள் கூட்டம் தொடர்பாக சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள ஆவணம் உண்மையானதுதான் என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி அக்கூட்டம் நடைபெற்றது. அது தொடர்பில் சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டது.
“இது தொடர்பாக என்னிடம் எழுப்பப்படக் கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளேன். இதன் வழி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட ஆவணம் உண்மையானதுதான். எனினும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று அருள் கந்தா நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி தலைவர் என்ற முறையில் அதன் இயக்குநர் வாரியத்துக்கும் பங்குதாரர்களுக்கும் உரிய விளக்கம் அளிக்க வேண்டியது தமது கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், 1எம்டிபியில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண்பதே தமது நோக்கம் என்று கூறியுள்ளார்.
“எனவே ஏற்கெனவே நடந்தவற்றை மூடி மறைக்கவோ அல்லது பொய் சொல்ல வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. சுய அரசியல் நோக்கத்துடன் ஒரு சிலர் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி குற்றம்சாட்டி வருகிறார்கள்” என்று அருள் கந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.