அங்காரா- துருக்கியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 186 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று தலைநகர் அங்காராவில் உள்ள ரயில் நிலையம் அருகே 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. அப்பகுதியில் அமைதிப் பேரணிக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த துணிகர சம்பவம் அரங்கேறியது.
குண்டு வெடித்ததும், கூடியிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்த பலர் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தனர்.
துருக்கியில் குர்து போராளிகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது அந்நாட்டு அரசு.
அத்தகைய தாக்குதல்களை நிறுத்தக் கோரி அமைதிப் பேரணிக்கு அந்நாட்டு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதற்காக பொதுமக்கள் கூடியிருந்த போதே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
நவம்பர் 1ஆம் தேதி துருக்கி நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அல்லது குர்து பிரிவினைவாதிகள் செயல்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்., தொடர்பான தனது நிலைப்பாட்டை அண்மையில் மாற்றிக் கொண்ட துருக்கி, அத்தீவிரவாதிகள் மீது தென் துருக்கியில் விமான தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது.
இதன் காரணமாக ஐ.எஸ். அமைப்பு துருக்கி மீது அதிருப்தி அடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.